சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் அமிர்தவல்லி தாயார் அருள்பாலிப்பு: பக்தர்களின்றி நடந்தது

சோளிங்கர்: 108 திவ்ய தலங்களில் ஒன்றாக விளங்கும் பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் அமிர்தவல்லி தாயார் ஒவ்வொரு ஆண்டும்   புரட்டாசி முதல் வாரத்தில் மலைக் கோயிலில் இருந்து நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள உற்சவர் பக்தோசித பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளி புரட்டாசி, ஐப்பசி ஆகிய 2 மாதங்கள் தங்கியிருந்து, நவராத்திரி உற்சவம், திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், வாரந்திர வெள்ளிக்கிழமைகளில் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு உற்சவங்களை கண்டருள்வது வழக்கம்.

இதையொட்டி கடந்த 19ம் தேதி  மலைக்கோயிலில் இருந்து ஊர் கோயிலான உற்சவர் பக்தோசித பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து புரட்டாசி 3ம் வெள்ளி முன்னிட்டு அமிர்தவல்லி தாயார் புறப்பாடு உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காலை அமிர்தவல்லி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு அமிர்தவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் பிரகாரத்தில் வலம் வந்தார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஜெயா, கண்காணிப்பாளர் விஜயன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். மேலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அரசு தடை விதித்ததால், பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கபடவில்லை.

Related Stories: