அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் கால்வாய் உடைப்பால் குடிநீரில் கலக்கும் கழிவுநீர்-குழந்தைகள் உடல் நலன் பாதிப்பு

அருமனை : அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால்  சுத்திகரிக்கபட்ட நீரிலும், வீட்டுக் கிணறுகளிலும் கழிவு நீர் கலந்து வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அருமனை பகுதியில்  முக்கிய சந்திப்புகளில் உள்ள நான்கு கழிவுநீர் கால்வாய்களை ஒன்றாக இணைத்து,  அருமனையிலிருந்து மஞ்சலூமூடு செல்லும் ஊரக சாலை வழியாக ஊருக்கு வெளியே உள்ள பகுதியில் வெளியேற்றப்படுகிறது. அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள  கடைகள், வீடுகள், உணவகங்கள் உட்பட அலுவலகங்களில் இருந்து வரும் அனைத்து கழிவுகளும் இந்த கால்வாய்கள் வழியாக வந்து வெளியேற்றப்படுகின்றன.

 இந்த கழிவுநீர் கால்வாய் அருமனை - மஞ்சாலுமூடு ஊரக சாலையில்  ஓரமாக ஒன்றாக சேருகிறது.  பனச்சவினை பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த கால்வாயில் மண் கொட்டி அடைக்கப்பட்டது. இதனால் கழிவு நீர்  கால்வாயிலிருந்து வெளியேறி சாலையில் குறுக்கே பாய்ந்து செல்கிறது.  இது குறித்து அப்பகுதி மக்கள்  பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது.

 இந்த பகுதியில்  அருமனை பேரூராட்சிக்கு உட்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அருமனை சுற்றுவட்டார பகுதி முழுவதுமாக குடிநீர் விநியோகிக்கபட்டு வருகிறது. சுத்திகரிக்கப்பட்டு வெளியே வரும் குடிநீர் குழாய்களிலும் அங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டுள்ளதால், இந்த  கழிவுநீர் குடிநீரில் கலந்து அருமனை  பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குழந்தைகள் உடல் நலம் பாதிப்படைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கழிவுநீர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள்  கூறுகையில், இரண்டு வருடமாக துர்நாற்றம், கிணற்று நீரில் கழிவுநீர் கலப்பு என மிகவும் பாதிப்படைந்துள்ளோம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலவிதமான நோய்களாலும் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் விஜயதரணி எம்எல்ஏவிடம் மனுக்கள் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. நோய்களின் பிடியிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற, கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்ப சரி செய்து, சுத்தமான குடிநீர்வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: