குமரியில் மழையால் மூழ்கிய நெற்பயிர்கள்: குறைந்த விலைக்கு வெளிமார்க்கெட்டில் விற்கும் விவசாயிகள்.!

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஆற்றுபாசனம், குளத்துபாசனத்தை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என்று இருபோக நெல்சாகுபடி நடக்கிறது. கடந்த ஜூன் மாதம் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி செய்தனர். மாவட்டத்தில் சுமார் 6300 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தேரூர் குளம், சுசீந்திரம் குளம், மணவாளக்குறிச்சி பெரிய குளம், வேம்பனூர் குளம், தாழக்குடி குளம் என்று பல்வேறு குளங்களை நம்பி பல ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்அடைந்து வருகின்றன.  இதேபோல் தோவாளை சானல், அனந்தனார் சானல், புத்தனார் சானல், முட்டம் சானல், இரணியல் சானல் உள்பட பல்வேறு சானல்களை நம்பியும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன. குளத்து பாசன வசதி பெறும் வயல் பரப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை நடந்தது. குறிப்பாக பறக்கை, தெங்கம்புதூர், சுசீந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை நடந்தது. தெரிசனங்கோப்பு, புத்தேரி, தாழக்குடி, தேரூர், இறச்சகுளம், ஈசாந்திமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் தற்போது அறுவடை தொடங்கி நடந்து வருகிறது.

 அறுவடை செய்யப்படும் நெல்களை கொள்முதல் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் திட்டுவிளை, தேரூர், புத்தளம், கிருஷ்ணன்கோவில், திங்கள்சந்தை ஆகிய இடங்களில் ெநல்கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. செண்பராமன்புதூர், தாழக்குடியில் நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன. ஆனால் அந்த கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை நெல்கொள்முதல் நிலையங்களில் கொண்டு செல்லப்படும் போது நெல்லில் ஈரப்பதம் இருப்பதை காரணம் காட்டி விவசாயிகளிடம் இருந்து நெல்களை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

 இதனால் விவசாயிகள் தனியார் வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களில் வெள்ளம் அதிக அளவு சென்றது. அறுவடை நடக்க இருந்த வயல்களிலும் வெள்ளம் நிரம்பியது. இதனால் அறுவடை செய்யவேண்டிய நெற்கதிர்கள் தரையில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்றும் விதத்தில் விவசாயிகள் அறுவடை செய்யக்கூடிய எந்திரங்களை கொண்டு அறுவடை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க குளத்து பாசன பகுதியில் அறுவடை நடந்த இடத்தில் இந்த மழை கைகொடுத்துள்ளது. அவர்கள் கும்பப்பூவிற்கு தயாராகி வருகின்றனர். சுசீந்திரம், பறக்கை உள்ளிட்ட பகுதிகளில் வயல்களை உழுது சமன்படுத்தும் வேலையில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதேபோல் வருகிற 10ம் தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள தெங்கம்புதூர் விவசாயிகளுக்கு இந்த மழையால் நீரின் தேவை குறைந்த அளவு பூர்த்தி ஆகியுள்ளது. இருப்பினும் தற்போது அறுவடை நடந்து வரும் தாழக்கடி, தேரூர், ஈசாந்திமங்கலம், புத்தேரி, வடசேரி, தெரிசனங்கோப்பு பகுதி விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

இது குறித்து முன்னோடி விவசாயி செண்பகசேகரபிள்ளை கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ அறுவடையின்போது அதிக மகசூல் கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு செலவு செய்த பணத்தில் இருந்து கொஞ்சம் கூடுதலாக பணம் கிடைக்கும். ஆனால் ஆற்றுபாசன பகுதியில் அறுவடை தொடங்கிய நிலையில் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் தண்ணீரில் நெற்பயிர்கள் மூழ்கியது. தண்ணீரில் மூழ்கியதால் இரு தினங்களில் நெல் முளைத்துவிடும் இதனால் நெல்லை காப்பாற்ற விவசாயிகள் சங்கிலி அறுவடை எந்திரம் கொண்டு அறுவடை செய்து வருகின்றனர். நெல்கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் காரணம் காட்டி அனைத்து நெல்களையும் கொள்முதல் செய்யவில்லை. இதனால் வெளி மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு நெல்களை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். மழையால் வைக்கோல் அனைத்தும் ஒன்றுக்கும் பயன் இல்லாமல் போய்யுள்ளது. என்றார்.

Related Stories: