மண்டைக்காடு அருகே 50 பவுன் கைவரிசை‘‘தனிக்குடித்தனத்துக்காக கொள்ளையடித்தோம்’’.! கைதான கள்ளக்காதல் ஜோடி பகீர் வாக்குமூலம்

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளையடித்த கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். தனிக்குடித்தனம் நடந்த 2 பேரும் திட்டமிட்டு கொள்ளையடித்ததாக அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே அழகன்பாறை வசந்தபுரத்தை சேர்ந்தவர் பிரசன்னகுமார். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி பேபி சுதா (43). அவரது தாய் வீடு குளச்சல் அருகே பெத்தல்புரத்தில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி பேபி சுதா வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் உள்ள உறவினரிடம் கொடுத்துவிட்டு, பெத்தேல்புரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் உறவினர் வீட்டை திறந்து பார்த்தார். அப்போது மேல் மாடி அறைக்கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பேபி சுதாவுக்கு தகவல் தெரிவித்தார். பேபி சுதா விரைந்து வந்து பார்த்த போது மேல் மாடி பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 50.5 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பேபி சுதா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். சப் - இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த கொள்ளை வழக்கில் பெத்தேல்புரத்தை சேர்ந்த தேவ சுதர் மனைவி  டிரைலின் சர்மிலி மோள் (24), அதே ஊரை சேர்ந்த ஏரோநாட்டிக்கல் பொறியாளர் பபின் (27) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 2 பேரிடமும் இருந்து 29.5 பவுன் நகைகள் மீட்ககப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டிரைலின் சர்மிலி மோள் கடந்த 2ம் தேதி தனது 3 வயது மகனை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு மாயமானார். மனைவி மாயமானது குறித்து கணவர் தேவ சுதர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான டிரைலின் சர்மிலி மோளை பல்வேறு இடங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது மாயமான டிரைலின் சர்மிலி மோள் கோயம்புத்தூரில், பபினுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததை தனிப்படையினர் கண்டுபிடித்தனர். 2 பேரும் கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரையும் பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அழகன்பாறை வசந்தபுரம் பிரசன்ன குமார் வீட்டில் நகை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட டிரைலின் சர்மிலி மோள் தக்கலை பெண்கள் சிறைச்சாலையிலும், பபின் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். அழகன்பாறை வசந்தபுரம் பேபி சுதா கைது செய்யப்பட்ட டிரைலின் சர்மிலி மோளின் கணவர் தேவசுதரின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மைத்துனி வீட்டில் நகை கொள்ளையடித்த  கள்ளக்காதல் ஜோடியால்  அந்த பகுதியில் பெரும் பரபரப்பை நிலவுகிறது.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட கள்ளக்காதலன் போலீசாரிடம் பரபரப்பு தகவல்களை கூறி உள்ளார். போலீசில் பபின் கூறியதாவது: நான் ஏரோநாட்டிக்கல் படித்துள்ளேன். சரியாக வேலை அமையவில்லை. எனது தந்தை புற்று நோயால் இறந்து விட்டார். எனக்கு நிறைய கடன் ஏற்பட்டது. டிரைலின் சர்மிலியுடன் ஏற்பட்ட பழக்கத்தால், தெரிந்தவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி தருமாறு அவளிடம்  கேட்டேன். அவளது கணவரின் தங்கை பேபி சுதாவிடம் பணம் வாங்கி தருமாறு கேட்டேன். அதற்கு அவள் பேபிசுதாவிடம் பணம் இல்லை. நகை தான் உண்டு என்று கூறினாள். நகைகளை கொள்ளையடிக்க 2 பேரும் திட்டமிட்டோம். முதலில் தயங்கிய டிரைலின் சர்மிலி பின்னர் சம்மதித்தாள். திட்டமிட்டப்படி கடந்த ஜனவரி 27 ம் தேதி பேபி சுதா தாயார் வீட்டுக்கு சென்ற போது வீட்டு மேல் மாடியில் ஏறி நகைகளை கொள்ளையடித்தேன். கொள்ளையடித்த நகைகளுடன் 2 பேரும் கோயம்புத்தூருக்கு சென்றோம். அங்கு தனிக்குடித்தனம் நடத்தி செட்டில் ஆகி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் போலீசார் எங்களை மோப்பம் பிடித்து கைது செய்து விட்டனர். இவ்வாறு பபின் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: