மாவட்டம் முழுவதும் 7 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடக்கம்

*ஒரே நாளில் 1835 மனுக்கள் குவிந்தது

*தீர்வு காண கலெக்டர் உத்தரவு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டிற்கான ஜமாபந்தி நேற்று 7 தாலுகா அலுவலகங்களில் தொடங்கியது. ஒரே நாளில் 1835 மனுக்கள் குவிந்தது. அவற்றின் மீது விசாரித்து தீர்வு காண கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில், நடப்பாண்டிற்கான ஜமாபந்தி சிறப்பு முகாம் நேற்று வட்டம் வாரியாக தொடங்கியது. இந்த சிறப்பு முகாம் வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.

பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையிலும், பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரின்ஸ்லி ராஜ்குமார் தலைமையிலும், தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் தனித்துணை ஆட்சியர் தனபிரியா தலைமையிலும், நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தலைமையிலும், காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் காயத்திரி தலைமையிலும், அரூர் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் உதவி ஆணையர் நர்மதா தலைமையிலும் ஜமாபந்தி நேற்று நடந்தது.

முகாமில் நிலப்பிரச்சனை தொடர்பான மனுக்கள், பட்டா மாறுதல் மேல்முறையீடு மனுக்கள், பட்டாவில் பெயர் திருத்தம், பட்டாதாரர் பெயர்களில் எழுத்துப்பிழை, பரப்பு திருத்தம், நிலவுடைமை மேம்பாட்டுத்திட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உட்பிரிவு மேல்முறையீடு மனுக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுமக்களின் குறைகள் தொடர்பான மனுக்கள் விவாதித்து தீர்வு காணப்பட்டது.

பென்னாகரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற முகாமினை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து, கூத்தப்பாடி மற்றும் அளேபுரம், அஞ்சே அள்ளி, ரங்காபுரம், கட்டிநாயக்கன அள்ளி, சிகரலஅள்ளி, சத்தியநாதபுரம், பருவதனஅள்ளி, பென்னாகரம், பேயல்மரி, செங்கனூர், கூக்குட்ட மருதஅள்ளி ஆகிய வருவாய் கிராம மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். மேலும், 386 மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் ராஜசேகர், பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், டிஎஸ்பி மகாலட்சுமி, உதவி இயக்குநர்(நில அளவை) செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் புலிகரை உள்வட்டத்தைச் சேர்ந்த 8 கிராம மக்களிடம் 60 மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் ஆறுமுகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தர்மபுரி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில், தர்மபுரி உள்வட்டத்தைச் சேர்ந்த 16 கிராம மக்களிடம் 292 மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் ஜெயசெல்வன், தனி தாசில்தார் (ச.பா.தி) சிவக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் அழகு சுந்தரம் மற்றும் பிறத் துறை சார்ந்த அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் பாப்பிரெட்டிப்பட்டி உள்வட்டத்தைச் சேர்ந்த 10 கிராம மக்களிடம் 350 மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நல்லம்பள்ளி உள்வட்டத்தைச் சேர்ந்த 10 கிராம மக்களிடம் 221 மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் பார்வதி மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அரூர் தாலுகா அலுவலகத்தில், அரூர் உள்வட்டத்தைச் சேர்ந்த 15 கிராம மக்களிடம் 283 மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் பிறத் துறை சார்ந்த அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில், காரிமங்கலம் உள்வட்டத்தைச் சேர்ந்த 12 கிராம மக்களிடம் 243 மனுக்கள் பெறப்பட்டது. தாசில்தார் ரமேஷ் மற்றும் பிறத் துறை சார்ந்த அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் 7 தாலுகா அலுவலகத்திலும் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. நேற்று ஒரேநாளில் 7 தாலுகாவிலும் இருந்து மொதுமக்கள் 1835 மனுக்கள் அளித்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை முழுமையாக ஆய்வு செய்து தீர்வு காணப்படும் என்றனர்.

தர்மபுரி தாலுகா அலுவலகத்தில், தனி துணை கலெக்டர் தனப்பிரியா பொதுமக்களிடமிருந்து 302 மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தாசில்தார் ஜெயசெல்வன், துணை தாசில்தார் கமருதீன், ஆர்ஐ ஜெயபிரசாத் மற்றும் விஏஓக்கள் சரவணன், தாமோதரன், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று கிருஷ்ணாபுரம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நடக்கிறது.

The post மாவட்டம் முழுவதும் 7 தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: