வேலூர் அலமேலுமங்காபுரத்தில் குடியிருப்பின் நடுவே குட்டையாக மாறிய நீரேற்று நிலையத்துக்கு ஒதுக்கிய இடம்: அச்சத்தில் வாழும் பொதுமக்கள்

வேலூர்:  வேலூர் மாநகராட்சி 2வது மண்டலம் அலமேலுமங்காபுரம் ஏபிஎல் அவென்யூ குடியிருப்பில் 500 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் அவ்வழியாக செல்லும் வரத்துக்கால்வாயை ஒட்டி அமைந்துள்ளது. இந்த இடத்தில் பூங்கா அமைக்கப்படாமல் இருந்த நிலையில் இங்கு நீரேற்று நிலையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்து குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைத்ததாக தெரிகிறது.ஆனால் நீரேற்று நிலையத்துக்கான பணிகள் தொடங்கப்படாததால் இவ்விடத்தில் சமூக விரோதிகளால் சட்டவிரோதமாக 10 அடி ஆழத்துக்கும் மேல் மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 10 அடி ஆழத்துக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீர் தேங்கி அப்பகுதியில் ஊறியுள்ளதால் அதை சுற்றியுள்ள வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மாநகராட்சியிடம் இரண்டு முறை நேரில் மனு அளித்துள்ளதாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் மேலும் கூறும்போது, ‘தண்ணீர் தேங்கியுள்ள பகுதியை சுற்றி காலியிடத்தில் இப்பகுதி சிறுவர்கள் கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளை விளையாடுகின்றனர். விளையாட்டின் ஆர்வத்தில் அவர்கள் அந்த குட்டையில் தவறி விழும் அபாயம் உள்ளது. அதோடு வீடுகளின் சுவர்களும் நீரில் ஊறி விரிசல் கண்டுள்ளது. இந்த இடம் நீரேற்று நிலையம் அமைப்பதற்காக மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைத்தது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கவில்லை.இதனால் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனே கழிகிறது. இதுதொடர்பாக இரண்டு முறை மாநகராட்சியில் மனு அளித்துவிட்டு வந்தோம். அவரும் ஒருமுறை போன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் இன்னும் பணி தொடங்கப்படவில்லை. எனவே, போர்க்கால அடிப்படையில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் மண் கொட்டி நிரப்ப வேண்டும். அல்லது நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: