வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் வைகை அணையில் அதிகாரிகள் ஆய்வு

ஆண்டிபட்டி: வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், வைகை அணையை மதுரை மண்டல பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. ஆண்டுதோறும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை அணையில் ஆய்வு செய்வது வழக்கம். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், நேற்று மதுரை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் கிருஷ்ணன் தலைமையில், பெரியாறு வைகை வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுகுமாரன் முன்னிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை ஆய்வு செய்தனர்.

அணை மதகு, மதகில் தண்ணீர் திறந்து விடப்படும் பகுதி, நீர்தேக்கப்பகுதி உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வைகை அணையில் 7 பெரிய மதகு மற்றும் 7 சிறிய மதகு என மொத்தம் 14 மதகுகள் வழியாக ஒரே நேரத்தில் 64 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்ற முடியும்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒருவேளை மழை அதிகமாக பெய்து நீர்வரத்து 64 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக வந்தால் அணையில் இருந்து தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. ஆய்வில் வைகை அணை உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர் ரித்திகா மீனாட்சி, இளம் பொறியாளர் குபேந்திரன், ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: