டெல்லி பயணத்தில் திடீர் திருப்பம்; அமித்ஷாவுடன் அமரீந்தர் சிங் சந்திப்பு: பாஜ.வில் இணைய திட்டமா?

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரசில் கடந்த சில மாதங்களாக குழப்ப நிலை நிலவி வருகிறது. பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் தனது பதவியை கடந்த 18ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அவர், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். இப்பயணத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து, அமரீந்தர் சிங் பாஜவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை மறுத்த அமரீந்தர், டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் இல்லத்தை காலி செய்ய வந்திருப்பதாகவும் பேட்டிகளில் குறிப்பிட்டார். இந்நிலையில், பஞ்சாப்பில் மாநில தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்து குழப்பமான சூழல் நிலவும் நிலையில், டெல்லியில் திடீர் திருப்பமாக அமரீந்தர் சிங் நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில்் சந்தித்து பேசினார். அமித்ஷா வீட்டிற்கு சென்ற அமரீந்தர் சிங் ஒரு மணி நேரம் பேசினார். அமித்ஷா-அமரீந்தர் சந்திப்பு பஞ்சாப் காங்கிரசில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் பிரச்னையை மீண்டும் கிளப்பிய கபில் சிபல்

பஞ்சாப் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் நேற்று அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பவரே இல்லை. முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. நாங்கள் ஜி-23 குழுவை சேர்ந்தவர்கள். பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருப்போம். பல முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து ஏன் வெளியேறுகிறார்கள்? ஒருவேளை அது நம் தவறா என்று நாம் ஆராய வேண்டும்? உடனடியாக காங்கிரஸ் செயற்குழுவை கூட்ட வேண்டும்,” என்றார்.

கடந்தாண்டு, காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள், கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இவர்களே, ஜி-23 குழுவினர் என்றழைக்கப்படுகின்றனர். இதற்கிடையே, கபில் சிபல் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரின் வீட்டின் முன்பாக டெல்லி மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கபில் சிபலின் வீட்டின் மீது தக்காளிகளை வீசி எதிர்ப்பை காட்டினர். மேலும், அவரது காரையும் சேதப்படுத்தினர்.

Related Stories: