நாடு முழுவதும் 25% பேருக்‍கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது!: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்..!!

டெல்லி: நாடு முழுவதும் 25 சதவீதம் பேருக்‍கு கொரோனா தடுப்பூசியின் 2 டோசும் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் முயற்சியாக உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முன்னுரிமை அடிப்படையில் தொடங்கியது. தற்போது 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது முதலே, தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்களுக்கு சற்று தயக்கம் இருந்தாலும், எந்த ஆபத்தும் இல்லை என்பதால் பலரும் தாமாகவே முன்வந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ளத் தொடங்கினர்.

இதன் காரணமாக தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் பெருக்கெடுக்க தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் 25 சதவீதம் பேருக்‍கு கொரோனா தடுப்பூசியின் 2 டோசும் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்திக்‍ கொண்டவர்கள் குறித்து நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் 68 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 25 சதவீதம் பேர் 2 டோசும் செலுத்திக்‍கொண்டது தெரியவந்துள்ளது. குஜராத்தில் 40 சதவீதம் பேரும், மத்தியப்பிரதேசத்தில் 27 சதவீதம் பேரும், மஹாராஷ்ட்ராவில் 26 சதவீதம் பேரும், தமிழகத்தில் 20 சதவீதம் பேரும், உத்தரப்பிரதேசத்தில் 13 சதவீதம் பேரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: