இயற்கை சீற்றங்களின்போது உதவ 350 மாவட்டங்களில் பேரிடர் நண்பர் குழு: அமித்ஷா அறிவிப்பு

புதுடெல்லி: இயற்கை பேரிடர்களின்போது உடனடியாக சென்று முதல் கட்ட மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக, நாடு முழுவதும் 350 மாவட்டங்களில் ‘பேரிடர் நண்பர்கள் குழு’வை ஒன்றிய அரசு ஏற்படுத்த உள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 17வது தொடக்க விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நாட்டில் எந்த இடத்தில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டாலும், முதல் ஆளாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகவும், உதவிகள் செய்வதற்காகவும் நாடு முழுவதும் 350 மாவட்டங்களில், ‘பேரிடர் நண்பர்கள் குழு’ அமைக்கப்படும். இவர்களுக்கு ‘ஆப்த மித்ரா’ திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். கொரோனாவை எதிர்த்து மற்ற நாடுகளை விட, 130 கோடி மக்கள்தொகையை கொண்ட இந்தியா சிறந்த முறையில் போராடியது.

பெருந்தொற்று காலத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பணி பாராட்டுக்குரியது. கொரோனா காலத்தில் சில பகுதிகளில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிறந்த திட்டமிடுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி ஆலை கூட சேதமாகவில்லை. அதே போன்று மருத்துவமனையில் மின் தடையும் ஏற்படவில்லை. ‘ஆப்த மித்ரா’ திட்டத்தை சோதனை முயற்சியாக 25 மாநிலங்களில் உள்ள 30 மாவட்டங்களில் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளோம். இதனால், இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படுகிறது. இயற்கை பேரிடர்களின் போது மக்களை உடனடியாக காப்பாற்றுவது தொடர்பாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த மக்களுக்கே இத்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும். பேரிடர் காலங்களில் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என்பதே ஒன்றிய அரசின் இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: