10 மாநில முதல்வர்களுடன் அமித்ஷா ஆலோசனை நக்சல் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்துகிறது ஒன்றிய அரசு

புதுடெல்லி: நக்சல் ஒழிப்பு நடவடிக்கை, எதிர்கால பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பாக ஆந்திரா உட்பட 10 மாநில முதல்வர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் ஆந்திரா, பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இவர்களை ஒழிப்பதற்கு இந்த மாநிலங்களில் சிறப்பு அதிரடிப்படைகள் அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக, ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் நக்சல்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பு படையினரும், பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனால், நக்சல் ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நக்சல்கள் ஒழிப்பு நடவடிக்கை பற்றி ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது 2 முறையோ, சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வந்தார். கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. ஆனால், இந்தாண்டுக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட 6 முதல்வர்கள் டெல்லிக்கு நேரடியாக சென்று இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். மேற்கு வங்கம் உட்பட 4 மாநிலங்கள் சார்பில் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தங்கள் மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி விவரித்தனர். மேலும், நக்சல்களுக்கு எதிரான எதிர்கால திட்டங்கள். நக்சல் பாதிப்பு பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள் நிலை போன்றவை பற்றி முதல்வர்களிடம் கேட்டறிந்த அமித்ஷா, நக்சல்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தினார்.

Related Stories: