திவாலான தனியார் சர்க்கரை ஆலை தரவேண்டிய ரூ.10 கோடியை பெற்றுத்தர கோரி விவசாயிகள் நூதன போராட்டம்-விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் துவங்கிய போது தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மேல்சட்டையை கழற்றி அரைநிர்வாணமாக அமர்ந்திருந்தனர். இதில் விவசாய சங்க நிர்வாகிகள் காரசாரமாக பேசினர்.

சங்க தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா: வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் 2018-19க்கான கரும்பு மத்திய அரசு விலையை ரூ.10 கோடி வழங்கவில்லை. ஆயிரம் விவசாயிகள் கரும்பை கொடுத்து விட்டு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனை வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் வட்டி செலுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக பல போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை. தற்போது தரணி சர்க்கரை ஆலை திவாலாகி விட்டது. ஆயிரம் விவசாயிகள் நடுத்தெருவில் நிற்கிறோம். மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வட்டியுடன் பெற்றுத்தர கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி: பருவமழை துவங்கி இருப்பதால் விவசாயத்திற்கு கூலி ஆட்கள் கிடைக்கவில்லை. நூறு நாள் வேலை திட்டப்பணியாளர்களை விவசாயத்திற்கு திருப்பி விட்டால் வேலையாட்கள் பற்றாக்குறை தீரும். அரசு சார்பில் கூலியும், நில உரிமையாளர்கள் வழங்கும் கூலியாலும் கூடுதல் பயன்பெறுவார்கள். மாவட்ட கலெக்டர் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நூறு நாள் பணியாளர்களை விவசாயத்திற்கு திருப்பி விட வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன்: கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடியில் நகையை வழங்கும் போது சங்க செயலாளர்கள் 10 முதல் 20 சதவீதம் வரை பணம் பெற்றுக் கொண்டு நகைகளை திருப்பி வழங்கி உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொடிக்குளம், கான்சாபுரம் கிராமங்களில் உள்ள நாட்டு மாடுகளை மேய்த்து வருகின்றனர். மாடுகளை மேய்ப்பதற்கும், தண்ணீர் குடிக்கவும் அனுமதி வழங்க வேண்டும்.

மலைமாடுகளை நம்பி உள்ள 150 குடும்பங்களையும், நாட்டுமலை மாடுகளை காப்பாற்ற வழி செய்ய வேண்டும். ஆனைக்குட்டம் அணை கட்டிய நாள் முதல் அணையின் ஷட்டர் பழுதாகி தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை தொடர்கிறது. விவசாயத்திற்கு பயனின்றி அணைநீர் வீணாகிறது. மழை பெய்யும் முன்பாக அணையின் ஷட்டரை சரி செய்ய வேண்டுமென்றார். நகைக்கடன் தள்ளுபடி நகைகளை திருப்பி தரும் போது பணம் பெற்ற சங்க செயலாளர் விவரங்களை அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பதிலளித்தார்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ரெங்குதாஸ்: மீசலூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 2020-21ம் ஆண்டுக்கான பயிர் இன்சூரன்ஸ் தொகை செலுத்தி, மழை மற்றும் படைப்புழு தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதற்கான நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீவனேரி கண்மாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் இருளப்பன்: மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மரங்களை வெட்டி கடத்துகின்றனர். பிளவக்கல் அணையில் 36 அடி தண்ணீர் உள்ள நிலையில் கண்மாய்களுக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும்.

இக்கூட்டத்தில் டிஆர்ஓ மங்கள ராமசுப்பிரமணியன், வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடியும் வரை தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சட்டை அணியவில்லை.

Related Stories: