வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை கட்டிப்போட்டு நகை பறிப்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவணிப்பாக்கத்தை சேர்ந்தவர்  ஞானசேகரன். விவசாயி. இவரது மகள் திவ்யா (28).  இவரது கணவர் செந்தில்குமார் (35), செங்கல்பட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன் திவ்யா, காவணிப்பாக்கத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றார். நேற்று மதியம் ஞானசேகரன் விவசாய வேலைக்கு சென்றார். திவ்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டின் பின்புற கதவை திறந்து உள்ளே நுழைந்த 2 பேர், திவ்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவரது, கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு, அவர் அணிந்திருந்த  5 சவரன் தங்க சங்கிலி, 4 சவரன் தாலி சரடு, 3 கிராம கம்மல் ஆகியவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

* உத்திரமேரூர் அடுத்த அண்ணா நகரை சேர்ந்தவர் சீனுவாசன் (41). பார்வை குறைபாடு உள்ளவர். உத்திரமேரூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர். இவரது மனைவி செல்வமணி (38). பார்வையற்ற மாற்றுத் திறனாளி. திருப்புலிவனம் அரசு பள்ளியில் ஆசிரியர். கடந்த 22ம் தேதி சீனுவாசன், மனைவியுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். நேற்று காலை அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் உள்ள பிரோவினை உடைத்து, அதிலிருந்த 8 சவரன் நகை, ரூ.30 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. மேற்கண்ட சம்பவங்கள் குறித்து சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>