இடுக்கி அருகே பைக்கில் வந்தபோது காட்டு யானை மிதித்து தமிழக இளம்பெண் பலி: கணவன் கண்ணெதிரே சோகம்

திருவனந்தபுரம்: மதுரை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (39). அவரது மனைவி விஜி (36). கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், சட்டமுணாறு பகுதியில் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தம்பதி பைக்கில் மதுரைக்கு வந்தனர். இன்று அதிகாலை மீண்டும் இடுக்கிக்கு புறப்பட்டனர். காலை சுமார் 5.45 மணியளவில் இடுக்கியை அடுத்த சங்கரபாண்டியமேடு பகுதியில் ஒரு வளைவில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு காட்டு யானை நின்று ெகாண்டிருந்தது. அதிகாலை நேரம் என்பதால் யானை நிற்பது மகேந்திரகுமாருக்கு தெரியவில்லை. அருகில் சென்றபோது தான் யானையை கண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பைக்கை வேகமாக திருப்ப முயன்றார்.

அப்போது நிலைதடுமாறி மகேந்திரகுமார், விஜி ஆகிய இருவரும் சாலையில் விழுந்தனர். இதையடுத்து காட்டு யானை ஓடிவந்து விஜியை காலால் மிதித்தது. இதில் அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மகேந்திரகுமார் தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து சென்று விட்டது. இதுகுறித்து அறிந்ததும் இடுக்கி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடலை மீட்டு அடிமாலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே மருத்துவமனையில் படுகாயத்துடன் மகேந்திரகுமார் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related Stories:

>