அருப்புக்கோட்டையில் வடிகால் தூர்வாரும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி தெற்குத்தெருவில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

அருப்புக்கோட்டை நகராட்சி தெற்குத்தெருவில் மழைநீர் வடிகாலில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தூர்வாரும் பணி கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், மழைநீர் வடிகால் தூய்மை பணியை தமிழகத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால்களையும் தூர்வாரி தூய்மைபடுத்த உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் மாபெரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அருப்புக்கோட்டை நகராட்சி பகுதியில் ஒரு கி.மீ தூரமுள்ள கம்மவார் மழைநீர் வடிகால், 3 கி.மீ தூரமுள்ள செவல் கண்மாய் மழைநீர் வடிகால், ஒரு கி.மீ தூரமுள்ள நேரு மைதானம் மழைநீர் வடிகால், 1.5 கி.மீ தூரமுள்ள நேதாஜி தெரு மழைநீர் வடிகால், 1.5 கி.மீ தூரமுள்ள பட்டாபிராமன் கோயில் தெரு மழைநீர் வடிகால், ஒரு கி.மீ தூரமுள்ள மலையரசன் கோயில் தெரு மழைநீர் வடிகால், ஒரு கி.மீ தூரமுள்ள செங்கோட்டை ஊரணி மழைநீர் வடிகால், ஒரு கி.மீ தூரமுள்ள மேட்டங்கரை மழைநீர் வடிகால் ஆகியவற்றை தூர்வாரும் பணிகள் நடைபெறவுள்ளது.

மேலும் அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிக்கு புதிய தாமிரபரணி குடிநீர் திட்டமும், பாதாளச்சாக்கடை திட்டமும் விரைவில் கொண்டு வரப்படும். மாவட்டத்தில் அருப்புக்கோட்டை சிவகாசி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுச்சாலை திட்டப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவ ட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், நகராட்சிகளின் மண்டல இயக்குநர் விஜயலெட்சுமி, மண்டலசெயற்பொறியாளர் சேர்மக்கனி, வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் முகமது சாகுல் ஹமீது,தாசில்தார் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்ஹசினா, முன்னாள் எம்எல்ஏ விஜயக்குமார், முன்னாள் சேர்மன்கள் சுப்பாராஜ், சிவப்பிரகாசம், மாநில நெசவாளர் அணி செயலாளர் பழனிச்சாமி, நகர திமுக செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: