ஆசனூர் அருகே கரும்பு லாரிகளை வழிமறிக்கும் காட்டு யானைகள்-வாகன ஓட்டிகள் பீதி

சத்தியமங்கலம் :  சத்தியமங்கலம் அருகே லாரியை குட்டியுடன் வழிமறித்து கரும்பு கேட்ட காட்டு  யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டுநர் சாலையோரம் கரும்பு துண்டுகளை  வீசிவிட்டு சமயோசிதமாக தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு  யானைகள் வசிக்கின்றன. இந்த காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில்  வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்  மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கம். தற்போது தாளவாடி  மலைப்பகுதியில் விவசாய தோட்டங்களில் வெட்டப்படும் கரும்பு, லாரிகளில் பாரம்  ஏற்றப்பட்டு சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக  சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்குக் கொண்டு  செல்லப்படுகிறது.\

இந்நிலையில் நேற்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில்  இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் செல்வதற்காக ஆசனூர் அருகே  சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு  யானை தனது குட்டியுடன் கரும்பு லாரி வருவதை கண்டு சாலையின் நடுவே நின்று  லாரியை வழிமறித்தது. யானை சாலையின் குறுக்கே கரும்புக்காக நின்றபடி லாரியை  வழிமறித்ததை கண்ட ஓட்டுநர் அச்சம் அடைந்தார்.

இதையடுத்து லாரியில் இருந்த  கிளீனரிடம் லாரியின் மீது ஏறி கரும்புத் துண்டுகளை சாலையோரம் தூக்கி  வீசுமாறு கூறினார். அதன்படி கிளீனர் லாரியின் மீது ஏறி கரும்பு  துண்டுகளை அள்ளி சாலையோரம் வீசினார். கரும்புதுண்டுகளை பார்த்த காட்டு யானை  தனது குட்டியுடன் சாலையோரம் சென்றது. சமயோசிதமாக யோசித்து ஓட்டுனர் காட்டு  யானை தனது குட்டியுடன் சாலையோரம் சென்றதும் லாரியை இயக்கி காட்டு  யானையிடம் இருந்து தப்பினார். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காட்டுயானை தனது குட்டியுடன் சாலையோரம்  கரும்புகளை தின்றபடி நின்றிருந்ததால் மற்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.

Related Stories: