விடுமுறை தினத்தையொட்டி திருக்காட்டுப்பள்ளி கொள்ளிடம் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்

*மணற்போக்கியில் குளித்து மகிழ்ந்தனர்

திருக்காட்டுப்பள்ளி : கல்லணைக் கொள்ளிடத்தில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளி அருகே கரிகாலன் கட்டிய கல்லணை உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்டது என்றாலும் திருச்சிக்கு அருகில் அமைந்துள்ளது. இது சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. கல்லணையை சுற்றிப்பார்க்க தமிழகம் உள்பட வெளி மாநிலங்களிலிருந்தும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள் வருகை தருவார்கள். இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் முக்கியமாக தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வந்துவிட்டு கல்லணையை கண்டுகளிப்பார்கள்.

கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவை உள்ளது. மழைக்காலங்களில் அனைத்து ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் செல்லும். தண்ணீர் செல்லும் அழகையும், அதிலிருந்து எழும் ஓசையும் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். கல்லணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரிநீரில் குளித்து மகிழ்வார்கள். மேலும் கரிகாலன் பூங்கா, சிறுவர் பூங்கா, கரிகாலன் மணிமண்டபம், வரலாற்று புராதன சின்னங்களும் காவிரித்தாயும், முனிவர்கள் சிலையும், கரிகாலன் யானை மீது அமர்ந்திருக்கும் சிலை ஆகியவையும் உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் வரும் சுற்றுலா பயணிகள் இவைகளை கண்டு ரசித்த பின் காவிரியில் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் ஏராளமான மாணவ, மாணவிகள் குடும்பத்துடன் கல்லணையை சுற்றிப்பார்ப்பதற்காக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கி தொடர்ந்து பத்து நாட்களாக மக்களை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் கல்லணைக்கு குறைவான மக்களே வருகை தந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளுமையான சீதோஷ்ணம் நிலவுகிறது.

மேலும் கல்லணைக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது. ஆனால் கோடைகாலம் என்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியவில்லை. தற்போது பல்வேறு மாவட்டங்களிலும் மேற்கு தொடர்ச்சி மழையில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் வெள்ளநீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணைக் கொள்ளிடம் மணற்போக்கியில் மட்டும் செல்கிறது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகும். இதனால் கல்லணைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

அப்படி வந்த சுற்றுலா பயணிகள் கல்லணை கொள்ளிடம் மணற்போக்கியில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் கரிகாலன் பூங்கா, சிறுவர் பூங்கா, கரிகாலன் மணிமண்டபம், வரலாற்று புராதன சின்னங்களும் காவிரித்தாயும், முனிவர்கள் சிலையும், கரிகாலன் யானை மீது அமர்ந்திருக்கும் சிலை ஆகியவற்றை சுற்றிப்பார்த்தனர். கல்லணைக்கு சுற்றுலா வந்ததன் நினைவாக செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

The post விடுமுறை தினத்தையொட்டி திருக்காட்டுப்பள்ளி கொள்ளிடம் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: