ரூ.1.80 லட்சத்துக்கு விற்கப்பட்ட பெண் குழந்தை கோவையில் மீட்பு: அரியலூர் தம்பதி, 3 ஏஜெண்டுகள் அதிரடி கைது

ஜெயங்கொண்டம்: அரியலூர் அருகே ரூ.1.80 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை  கோவையில் நேற்று மீட்கப்பட்டது. இது தொடர்பாக தம்பதி, 3 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சரவணன்(38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மீனா(27). இவர்களுக்கு 9 வயது, 4 வயது மற்றும் 3 வயதில் ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மீனா 4-வதாக கர்ப்பமடைந்து கடந்த 3  மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பெற்றார். குடும்ப வறுமை காரணமாக இக்குழந்தையை விற்றுவிட்டதாக அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் வந்தது

இதன்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வடவீக்கம் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மண்ணச்சநல்லூரை சேர்ந்த புரோக்கர் முத்தையா மூலம் ஈரோட்டை சேர்ந்த 2 புரோக்கர்கள் உதவியுடன் கோவையில் உள்ள தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. இதன்பின், முத்தையாவை ஈரோடுக்கு அழைத்து சென்று புரோக்கர்கள் ராஜேந்திரன், செந்தில்குமார் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், கோயம்புத்தூரில் உள்ள தம்பதியிடம் கடந்த  17ம்தேதி ரூ.2.75  லட்சம் விலை பேசி குழந்தையை விற்றுள்ளனர்.

குழந்தையின் பெற்றோருக்கு ரூ.1.80 லட்சத்தை கொடுத்துவிட்டு மீது பங்கிட்டு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேருடன் போலீசார் கோயம்புத்தூர் சென்று, அங்கு தம்பதியினரிடம் இருந்து குழந்தையை மீட்டு ஜெயங்கொண்டத்திற்கு நேற்று கொண்டு வந்தனர். பின்னர், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 81-ன்கீழ் போலீசார் வழக்குப்பதிந்து குழந்தையின் பெற்றோர் சரவணன்-மீனா மற்றும்  புரோக்கர்கள் முத்தையா, ராஜேந்திரன், செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: