21 நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணை திறப்பு: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கோபி: கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு 21 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில்  15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர்  கொட்டுவதால், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர், கோவை, கரூர், சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த மாதம் அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 102 அடியை எட்டியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் பவானி ஆற்றில் வெளியற்றப்பட்டது.

இதனால், பவானி ஆற்றில் 5 ஆயிரத்து 800 கன அடி வரை தண்ணீர் வரத்து இருந்ததால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கொடிவேரி அணை கடந்த 31ம் தேதி மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து உள்ளதாலும், கீழ்பவானி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாலும், இன்று முதல் கொடிவேரி அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அணைக்குள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவர் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: