அரியர் பணம் வழங்க தோட்ட அதிபர்கள் மறுப்பு எதிரொலி: எஸ்டேட் தொழிலாளர் 7வது கட்ட சம்பள உயர்வு பேச்சு தோல்வி

கோவை: அரியர் பணம் வழங்க தோட்ட அதிபர்கள் மறுப்பு தெரிவித்ததால் கோவையில் 7வது கட்டமாக நடந்த எஸ்டேட் தொழிலாளர் சம்பள பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. கோவை ஏ.டி.டி. காலனியில் உள்ள தமிழ்நாடு தேயிலை தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகத்தில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வுக்கான 7ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில்,  தினக்கூலியாக ரூ.395க்கான இடைக்கால சம்பள ஒப்பந்தம் செய்துகொள்ள தயார் என தோட்ட அதிபர்கள் கூறினர்.

ஆனால், இதை தொழிற்சங்க தலைவர்கள் ஏற்கவில்லை. மேலும், 1.7.2021 முதல் அரியர் வழங்க ஒத்துக்கொண்டால், இடைக்கால ஒப்பந்தம் செய்துகொள்ள தயார் எனக்கூறினர். இதை, தோட்ட அதிபர்கள் ஏற்கவில்லை. இதனால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. நேற்று மதியம் 2 மணிக்கு துவங்கி மாலை 6.30 மணி வரை பேச்சுவார்த்தை நடந்தாலும், எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. பேச்சுவார்த்தையில், தோட்ட அதிபர்கள் தரப்பில் ஆனைமலை தோட்ட அதிபர்கள் சங்க நிர்வாகியும், வுட்பிரையர் குரூப் துணை தலைவருமான பாலச்சந்திரன்,

ஜெயஸ்ரீ குரூப் பொது மேலாளர் கார்டிலே சதாசிவம், பாரி அக்ரோ குரூப் துணை தலைவர் மகேஷ் நாயர், டாடா காபி குரூப் பொதுமேலாளர் ஆலிவர் பிரவீன் குமார் மற்றும் தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்க செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் கூட்டமைப்பு தலைவர் வால்பாறை வீ.அமீது (ஏடிபி), சவுந்திரபாண்டியன், வினோத்குமார், கோழிக்கடை கணேசன் (எல்பிஎப்), செந்தில்குமார், கருப்பையா (ஐஎன்டியுசி), ராமகிருஷ்ணன் (ஏஐடியுசி.), மோகன், கேசவன் மருகன் (எல்.எல்.எப்.), வீரமணி, மாணிக்கம், கே.எம். தங்கவேல், செந்தில், வர்க்கீஸ், தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: