இளம்பெண் கொலையில் திடுக் தகவல்; ‘கள்ளக்காதலை கைவிடாததால் கொன்றேன்’- கைதான தம்பி பரபரப்பு வாக்குமூலம்

திருவண்ணாமலை: செய்யாறு அருகே இளம்பெண் கொலை வழக்கில் அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அக்காவை பயறுமுத்த தாக்கியபோது அவர் இறந்துவிட்டதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(35). இவர் தனது அக்கா மகளான ராஜேஸ்வரி என்பவரை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கோவேஷ்கண்ணன்(4) என்ற மகன் உள்ளார்.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் வெங்கடேசன் அழிவிடைதாங்கியில் உள்ள மற்றொரு சகோதரி விஜயகுமாரி வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். கடந்த 18ம்தேதி இரவு ராஜேஸ்வரியும், அவரது சகோதரர் பிரபாகரனும் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கினர். மறுநாள் காலை ராஜேஸ்வரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிந்து ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ராஜேஸ்வரியின் தம்பி பிரபாகரன்(24) நேற்று மாலை அப்துல்லாபுரம் விஏஓ கலாவிடம் சரண் அடைந்தார். அவரை தூசி போலீசில் விஏஓ கலா ஒப்படைத்தார். போலீசாரிடம் பிரபாகரன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: எனது மாமாவுக்கும் அக்காவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதை கேட்டபோது எனது அக்கா, வேறு ஒருவருடன் தகாத பழக்கம் வைத்துள்ளது தெரியவந்தது. அவரை நானும், மாமாவும் பலமுறை கண்டித்துள்ளோம். தகாத பழக்கம் குறித்து ஊரில் இருப்பவர்கள் ஆபாசமாக பேசுகிறார்கள்.

வெளியே தலை காட்ட முடியவில்லை. தகாத பழக்கத்தை கைவிடும்படி பலமுறை கூறினோம். ஆனால் அவர் கைவிடவில்லை. இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு, எனது அக்கா வேறு ஒருவருடன் பேசியதை கண்ட எனது மாமா, சண்டைபோட்டு விட்டு அவரது மற்றொரு அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையறிந்த நான், கடந்த 10 நாட்களாக எனது அக்காவுக்கு அறிவுரை கூறி வந்தேன். கடந்த 18ம்தேதியும் அக்கா வீட்டிற்கு வந்த நான், தகாத பழக்கத்தால் நமக்கும், இருவரின் குடும்பத்திற்கும் கெட்ட பெயர் ஏற்படும்.

இங்கு இருக்க பிடிக்கவில்லையென்றால் நமது சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் சங்கராபுரத்துக்கு சென்றுவிடலாம் என அழைத்தேன். ஆனால் எனது அக்கா வரவில்லை. பலமுறை வற்புறுத்தியும் பிடிவாதமாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரை பயமுறுத்துவதற்காக அவரது தலைமுடியை பிடித்து இழுத்து சுவரில் மோதினேன். மேலும் கழுத்தை இறுக்கினேன். உடனே அவர் மயங்கி விழுந்தார். மறுநாள் காலைதான் அவர் இறந்தது தெரியும்.

எனது அக்கா கொலையானதை போலீசார் கண்டுபிடித்து இருப்பார்கள் என எண்ணி, விஏஓவிடம் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்து செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: