சூளைமேட்டில் இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம்; அரசு ஊழியர் உட்பட 2 பேர் கைது: இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை நடவடிக்கை

சென்னை: சென்னை சூளைமேடு கில் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பழனிகுமார்(57). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த இன்ஜினியர் பாலகிருஷ்ணன்(30) என்பவருக்கு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளர் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி அரசு வேலை வாங்கி தரவில்லை. பிறகு கொடுத்த பணத்தை பாலகிருஷ்ணன் திரும்ப கேட்ட போது ரூ.10 லட்சத்திற்கான காசோலை பழனிகுமார் கொடுத்துள்ளார்.

வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிவிட்டது. இதனால் பணம் கொடுத்த பாலகிருஷ்ணன் கடந்த 10ம் தேதி தொழிலதிபர் பழனிகுமார் வீட்டிற்கு வந்து பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென பாலகிருஷ்ணன் தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி  பழனிகுமார் வீட்டின் முன்பு தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலதிபர் பழனிகுமாரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் சென்னை தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமசிவம்(59) என்பவர் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மேலும், தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிடம் பணத்தை வாங்கி கொடுத்த இடைத்தரகர் தேனி மாவட்ட ஆண்டிப்பட்டியை சேர்ந்த இடைத்தரகர் செல்வக்குமார் ஆகிய இருவரையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையின் தீவிர தேடுதல் வேட்டையில் நேற்று அரசு ஊழியரான பரமசிவம் மற்றும் இடைத்தரகர் செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: