நாகர்கோவிலில் கழிவுநீர் கொட்ட வந்த வாகனம் சிறைபிடிப்பு-பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு

நாகர்கோவில் :  நாகர்கோவில் மாநகர பகுதியில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் சில வாகனங்கள் அதன் கழிவுகளை வயல்வெளிகள், பாசன கால்வாய்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் அருகே கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

நீர் நிலைகளில் செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டுவதால் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. இவ்வாறு கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் வடிகால்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக வடிகால்களில் கழிவு நீரை ெவளியேற்றும் வகையில் தனியார் செப்டிக் டேங்க் வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வரவழைத்து இருந்தது.

மாநகராட்சி சார்பில் கோட்டார் பகுதியில் வடிகால் சுத்தம் செய்யும் பணி நடந்தது. கழிவு நீர் கால்வாயில் அடைப்பை அகற்றுவதற்காக வடிகாலில் இருந்து கழிவுநீர் ஊர்தி வாகனம் மூலம் கழிவு நீரை ஏற்றி, நாகர்கோவில் சந்திப்பு ரயில்வே ரோட்டில் கொட்டுவதற்கு வந்தனர். இது குறித்து அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் வீடுகள், நிறுவனங்களில் இருந்து செப்டிக் டேங்க் கழிவுகளை தான் கொண்டு வந்து கொட்டுகிறார்கள் என நினைத்தனர்.

பின்னர் தான் மாநகராட்சி பணியாளர்கள் அந்த பகுதியில் நின்றதும், கழிவு நீர் கால்வாயில் இருந்து கழிவு நீரை நிரப்பி கொண்டு வந்து கொட்டுவது தெரிய வந்தது. இருப்பினும் பொதுமக்கள்  கொட்ட கூடாது என்றனர். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து கழிவு நீர் ஊர்தி வாகனம் அங்கிருந்து சென்றது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>