ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கோயில் அன்னதான மண்டபங்களில் உணவு விநியோகம்-பக்தர்கள் மகிழ்ச்சி

நாகர்கோவில் : குமரி கோயில்களில் அன்னதான மண்டபங்கள் திறந்து நேற்று முதல் உணவு விநியோகம் தொடங்கி உள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இயல்புநிலை திரும்பி வருகிறது. பள்ளி கல்லூரிகளும் திறந்து செயல்படுகின்றன. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தவிர மற்ற நாட்கள் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கோயில்களுக்கு வெளியே அன்னதானம் பார்சலாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் செப்டம்பர் 20ம்தேதி முதல் கோயில்களில் உள்ள அன்னதான மண்டபங்கள் திறந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறை கோயில்களில் நேற்று (20ம்தேதி) அன்னதான மண்டபங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நாகர்கோவில் நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோயில், தோவாளை கிருஷ்ணன்கோயில், திற்பரப்பு மகாதேவர் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நேற்று காலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயிலுக்கு வந்த பக்தர்கள் அன்னதான மண்டபங்களில் அமர்ந்து உணவருந்தினர். சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது.

சுசீந்திரத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், கோயில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அன்னதானம் மண்டபங்கள் திறக்கப்பட்டு கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அன்னதானம் பார்சலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>