பெட்ரோல், டீசல் விலையில் செஸ் வரியை ஒன்றிய அரசு கைவிட்டால் ஜிஎஸ்டிக்குள் வரத்தயார்: பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை:  தமிழக  நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல்  தியாகராஜன் நேற்று மதுரையில் அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2018ல் கோரிக்கை விடுத்தார். 2018க்கும், 2021க்கும் இடைப்பட்ட காலங்களில் பெட்ரொல், டீசல், கச்சா எண்ணெய் விலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2014ல் பாஜ ஆட்சி பொறுப்பேற்றபோது செஸ் வரி பெட்ரோலுக்கு 10 ரூபாயாகவும், டீசலுக்கு 5 ரூபாயாகவும் இருந்தது. தற்போது பெட்ரோல் வரி 32 ரூபாயாகவும், டீசல் வரி 31 ரூபாயாகவும் உள்ளது. மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட செஸ் வரியை ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்காமல்

வைத்துள்ளது.

ஒன்றிய அரசின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெட்ரோல், டீசல் வழியாக வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர ஒன்றிய அரசும் விரும்பவில்லை. மாநில அரசுகளும் விரும்பவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிகளை ஒன்றிய அரசு குறைத்துள்ளதால் மக்கள் மீது இருமடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு பெட்ரோல், டீசல், ஆல்கஹால் ஆகிய இரு வரி வருவாய் மட்டுமே கிடைக்கிறது. மாநில வரி வருவாயையும் ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டால் மாநிலங்கள் எப்படி நிர்வாகத்தை நடத்த முடியும்? நிலைமைக்கு ஏற்ப வரியில் மாறுதல் செய்யும் உரிமையை மாநில அரசு இழந்து விட்டது. எனவே, நிலைமை மாறியுள்ளதால் அரசின் நிலைப்பாடு மாறி உள்ளது. ஆனால் கொள்கை மாறவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசு விதிக்கும் செஸ் வரியை கைவிட்டால், தமிழக அரசு ஜிஎஸ்டிக்குள் வர தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: