காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்; யாரைத் தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவர் : ப.சிதம்பரம் காட்டம்

சென்னை : காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம், மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றுதல் என 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்யும் விபி-ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மசோதாவை விரிவாக ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டுமென வலியுறுத்தின.குறிப்பாக மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த பெயர் மாற்றம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ப.சிதம்பரம், ” மகாத்மா காந்தி அவர்களின் பெயரை அழித்து விட்டு புதிய சட்டம், புதிய திட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியடிகளைக் கொலை செய்ததைவிடக் கொடிய செயல். காந்தியடிகளின் மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு, எவ்வளவு காழ்ப்புணர்வு என்பதை இந்த ஒரு செயலே அம்பலப்படுத்துகிறது. காந்தியடிகளின் பெயரையும் நினைவையும் அழித்து விட்டு யாரைத் தேசப் பிதாவாக இவர்கள் முன்னிறுத்துவார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன். இந்தியாவின் வரலாறு 2014ம் ஆண்டிலே தான் தொடங்கியது என்று பறைசாற்றியவர்கள் இன்னும் எத்தனை கொடுமைகளச் செய்வார்கள் என்று பார்க்கலாம். தென்னாட்டை  பின்பற்றி வடநாடு ஒரு நாள் திரும்பும் என்ற நம்பிக்கையில் இந்த நாட்டின் எளிய மக்கள் வாழ்கிறார்கள்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: