உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 7வயது மகளை அடித்து கொன்று ஆற்றில் வீச்சு: கள்ளக்காதலனுடன் தாய் கைது

தஞ்சை: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 7 வயது சிறுமியை அடித்து கொன்று உடலை ஆற்றில் வீசிய சிறுமியின் தாய், அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி விஜயலட்சுமி(30). இவர்களுக்கு வித்யா(7), விக்னேஷ்(4), என்ற இரண்டு குழந்தைகள். கணவர் இறந்த நிலையில், விஜயலட்சுமி தனது இரு குழந்தைகளுடன் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

அப்போது, விஜயலட்சுமியின் தூரத்து உறவினரான வெற்றிவேல்(36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. வெற்றிவேலின் மனைவி முத்தமிழ்செல்வி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தொல்காப்பியர் சதுக்கம் அருகே மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஒரு கொட்டகையில், விஜயலட்சுமியையும் அவரது இரு குழந்தைகளையும் கடந்த 5 மாதங்களாக வெற்றிவேல் தங்க வைத்துள்ளார். அவ்வப்போது வெற்றிவேல், இரவு நேரத்தில் விஜயலட்சுமியை சந்தித்து விட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயலட்சுமியின் கொட்டகைக்கு போதையில் வந்த வெற்றிவேல், விஜயலட்சுமியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அப்போது சிறுவன் விக்னேஷ் தூங்கிவிட்டான். மகள் வித்யா மட்டும் தூங்காமல் இருந்தார்.  இதனால் விஜயலட்சமி  வெற்றிவேலின் ஆசைக்கு இணங்கவில்லை.  இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றிவேல் விஜலட்சுமியை தாக்கினார். தன் கண் எதிரே தாய் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி வித்யா வாசலுக்கு சென்று காப்பாற்றும்படி சத்தம்  போட்டாள்.  

இதனால் மேலும் ஆத்திரமடைந்த வெற்றிவேல் சிறுமி வித்யாவை அடித்து கீழே தள்ளினார். இதில் சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே வெற்றிவேலும், விஜயலட்சுமியும் வித்யாவை தூக்கி கொண்டு தஞ்சை ராஜாமிராசுதார் அரசு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டது தெரிந்ததால்  மருத்துவமனை வளாகத்துடன் அவர்கள் நின்றுவிட்டனர்.

இதைதொடர்ந்து சிறுமியின் உடலை வெற்றிவேல் தனது தோளில் தூக்கி போட்டுக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்தார்.

இதையடுத்து வெற்றிவேல், விஜயலட்சுமி, வெற்றிவேலின் மைத்துனர் சபரிநாதன் ஆகிய மூவரும் சேர்ந்து சிறுமி வித்யாவின் உடலை கோரிக்குளம் சுடுகாட்டில் குழிதோண்டி புதைக்க முயன்றுள்ளனர்.  அங்கு ஆள் நடமாட்டம் இருந்ததால் சிறுமியின் உடலை சுடுகாட்டில் புதைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து சிறுமியின் உடலை, கல்லணை கால்வாய் ஆற்றில் வீசி விட்டனர். இந்த சம்பவத்தை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று காலை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தஞ்சாவூர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து விஜயலட்சுமி மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தபோது, இருவரும் நடந்த சம்பவத்தை ஒப்புகொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக சபரிநாதனை தேடி வருகின்றனர். இதையடுத்து ஆற்றில் வீசிய சிறுமியின் உடலை தேடும் பணி 2வது நாளாக இன்றும் நடந்தது.

Related Stories:

>