முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால் ஆசிரியர் தேர்வுகள் எழுத வாழ்நாள் தடை: டிஆர்பி எச்சரிக்கை

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர், வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத அளவுக்கு தடை விதிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் எச்சரித்துள்ளது.  முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி ஆசிரியர்கள்  நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தேர்வின்போது, தேர்வு மையங்களில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவோர், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் நடக்கும் தேர்வர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் பங்கேற்க முடியாத வகையில் தடை விதிக்கப்படும். மேலும் ஆயுட்காலம் முழுவதும் தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது எச்சரித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி  ஆசிரியர். உடற்கல்வி இயக்குநர், கணினி  ஆசிரியர் பணியிடங்கள் 2,207 உள்ளன. இவற்றில் நிரப்பப்படாமல் உள்ள 247 காலியிடங்களும், புதிய பணியிடங்கள் 1,960 இடங்களும் அடங்கும். இந்த பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான எழுத்து தேர்வு நவம்பர் 13, 14, 15ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்ப பதிவேற்றம், கட்டணம் செலுத்துதல், உள்ளிட்ட அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலமே நடக்கும்.  இதையடுத்து, தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

* கணினி வழியில் தேர்வு எழுத ஒவ்வொருவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* கர்ப்பிணிப் பெண்கள்,கடுமையான நோயால் பாதித்தவர்கள் அதற்கான சான்றுகளை சமர்ப்பித்தால் அவர்களுக்கு அருகமை தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும்.

* தேர்வு மையம் அமையும் மாவட்டம் குறித்த  விவரங்கள் 7 நாட்களுக்கு முன்னதாகவும், தேர்வு மைய விவரம் தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

* ஹால்டிக்கெட்டுகள் இணைய வழியில் மட்டுமே வழங்கப்படும்.

* முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான சந்தேகம், கணினி வழி தேர்வில்  இடம் பெறும் கேள்விகள் தொடர்பாக விடைக்குறிப்பும் ஆட்சேபணைகளும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

* கட்ஆப் மதிப்பெண் இருந்தும் விண்ணப்பித்த பணிக்கான உரிய கல்வித்தகுதி இல்லை என்றால் நிராகரிக்கப்படுவார்.

* நிர்வாக காரணங்கள், நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களுக்காக, தேர்வு  வாரியம்  நடத்தும் தேர்வை தள்ளி வைக்கவோ, ரத்து செய்யவோ வாரியத்துக்கு முழு உரிமை உள்ளது.

* தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் விதமாக நடந்தால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் 5 முதல் 7 ஆண்டுகள் வரை எந்த தேர்வும் எழுத முடியாத வகையில் தடை விதிக்கப்படும். மேலும் ஆயுட்கால தடை விதிக்கவும் முடியும்.

Related Stories: