சென்னை, டிச.25: சென்னை மாநகராட்சியில் ஆண்டுக்கு ரூ.75 கோடி வருமானம் ஈட்டும் புதிய விளம்பர திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி தனது சொந்த வருமானத்தை கணிசமாக உயர்த்தும் நோக்கத்தில் ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 2026 ஜனவரி முதல் ஆண்டுக்கு ரூ.75 கோடி வரை வருமானம் ஈட்டுவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்கு. இதற்காக, தனியார் விளம்பர நிறுவனங்களை ஈர்த்து, சென்னை முழுவதும் 14,000க்கும் மேற்பட்ட இடங்களில் விளம்பரங்கள் காட்ட அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக கட்டிடங்கள் துறை சார்பில் ரூ.73 கோடி மதிப்பிலான டெண்டர்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஏல அறிவிப்பும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.
விளம்பரங்கள் பாரம்பரிய பேனர் வடிவத்தில் இருக்காது. மாறாக, தெரு விளக்கு கம்பங்களில் உள்ள வகையில் (ஸ்ட்ரீட் லைட் போல) அமைக்கப்படும். விளம்பரத்தின் அளவு மற்றும் வடிவத்தை மாநகராட்சியே முடிவு செய்யும். ஆனால், விளம்பரத்திற்கான பிரேம், கேசிங் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை தனியார் நிறுவனங்களே செய்து அளிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பணிகள் 2026 ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சி சார்பில் மொத்தம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை தேர்வு செய்துள்ளது. இதில், பிரதானமாக தெரு விளக்கு கம்பங்கள் – பேருந்து வழித்தட சாலைகளில் உள்ளவை. குறிப்பாக விஜயா பார்க், நடேசன் பார்க், கே.கே.நகர் சிவன் பார்க், பாரதிதாசன் காலனி, அம்மா பார்க் (சைதாப்பேட்டை), தைசா பார்க் (கோயம்பேடு ஐஏஎஸ் குவார்ட்டர்ஸ்), அருணாச்சலம் காலனி, வெங்கட்நாராயணன் விளையாட்டு மைதானம், ஆர்.ஆர்.காலனி மைதானம், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், முல்லை நகர், சர்மா நகர், கொரட்டூர், பாடி, இளங்கோ நகர் போன்ற பகுதிகளும் இதில் அடங்கும்.
அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, கே.கே.நகர், திருவேற்காடு, வடபழனி உள்ளிட்ட இடங்களில் 35 பஸ் நிறுத்தங்கள் ஆகும். இவற்றில் மொத்தம் 1,691 சதுர மீட்டர் விளம்பர இடம் கிடைக்கும். தெரு விளக்கு கம்பங்கள் பேருந்து வழித்தடங்களில் உள்ளவை (எ.கா. அம்பேத்கர் கல்லூரி சாலை, வில்லிவாக்கம்-ரெட்ஹில்ஸ் சாலை, எஸ்.ஆர்.பி. காலனி மெயின் ரோடு, மேடவாக்கம் டேங்க் ரோடு, பெரம்பூர் ஹைரோடு போன்றவை). 12,219 கம்பங்களில் மொத்தம் 34,267 சதுர மீட்டர் விளம்பர இடம். 1,534 பூங்காக்களில் மொத்தம் 52,437 சதுர மீட்டர் விளம்பர இடம் கிடைக்கும். இதேபோன்று பல இடங்களில் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் மாநகராட்சி தனது சொந்த வருமானத்தை பெருமளவு அதிகரிக்க எதிர்பார்க்கிறது. இதனால் சென்னையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மக்களுக்கு ஒழுங்குமுறையான, சுத்தமான விளம்பரங்களை வழங்கவும் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் சென்னை நகரின் அழகையும் பாதுகாத்து, நிதி ரீதியாக வலுவான மாநகராட்சியை உருவாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
