சென்னை, டிச.23: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், சென்னை சிவானந்தா சாலையில் கடந்த வியாழக்கிழமை சம வேலைக்கு, சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி (எம்.ஆர்.பி) தற்காலிக செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்ட செவிலியர்களை, போலீசார் கைது செய்து கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டனர். கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், மண்டபத்தில் இருந்து வெளியேறிய செவிலியர்கள் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அமர்ந்து, 5வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் கூறுகையில், தொடர்ந்து 5வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் போராட்ட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் திருப்திகரம் இல்லாததால் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளோம், என்றனர்.
