ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை மோடி-காங்கிரஸ் மோதல்: ஒரு கட்சிக்கு காய்ச்சல் வந்து விட்டது தினமும் பிறந்தநாள் கொண்டாடுங்க...

பானாஜி: ‘‘எனது பிறந்தநாளில் நாடு முழுவதும் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சாதனை என்றென்றும் வாழ்வில் மறக்க முடியாத, உணர்வுப்பூர்வமான தருணமாகும்’’ என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார். பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாளையொட்டி, நாடு முழுவதும் 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி நேற்று முன்தினம் போடப்பட்டது. இந்நிலையில், கோவா மாநிலத்தில் 100% பேருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து, அம்மாநில சுகாதார பணியாளர்கள் மற்றும் பயனாளிகளிடம் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா மகத்தான உலக சாதனை படைத்துள்ளது. பெரும்பாலான சக்திவாய்ந்த நாடுகளால் கூட இந்த இலக்கை எட்ட முடியவில்லை. ஒரு மணி நேரத்திற்கு 15 லட்சம் தடுப்பூசிகளும், ஒரு நிமிடத்திற்கு 26,000 தடுப்பூசிகளும், ஒரு நொடிக்கு 425 பேருக்கு தடுப்பூசியும் செலுத்தி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பிறந்தநாட்கள் வரும், போகும். அதில் எப்போதும் நான் அக்கறை காட்டியதில்லை. ஆனால் இந்த பிறந்தநாள் எனக்கு உணர்வுப்பூர்வமாக தருணமாகும். என் வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்தநாள் இது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் காய்ச்சல் வருவதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், எனது பிறந்தநாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதும் ஒரு கட்சிக்கு காய்ச்சல் வந்து விட்டது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

காங்கிரஸ் பதிலடி:  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டிவிட்டரில்,  ‘‘இன்னும் அதிகமான 2.1 கோடி தடுப்பூசி நாட்கள் வரவேண்டுமென  எதிர்பார்க்கிறோம். இந்த வேகம், நாட்டுக்கு வேண்டும்’’ என்றார். காங்கிரஸ்  மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘‘தடுப்பூசி என்பது பிறந்தநாளில் வெட்டுகின்ற  கேக் அல்ல. இது ஒரு திட்டம், இதை ஒவ்வொரு நாளும் வேகப்படுத்த வேண்டும்,  பிறந்தநாளில் மட்டுமல்ல. ஒருவேளை மோடியின் பிறந்தநாள் டிசம்பர் 31ம் தேதி என்றால், ஆண்டின் கடைசி நாளான அன்றுதான் நீங்கள் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தி சாதித்திருப்பீர்களா? உபி, மபி, குஜராத், கர்நாடகா போன்ற பாஜ ஆளும்  மாநிலங்கள் பிரதமர் பிறந்தநாளில் பலமடங்கு சிறப்பாக செயல்பட்டு தடுப்பூசி செலுத்தி உள்ளன.

மற்ற  நாட்களில் செயல்படாத மாநிலங்களாக அவை உள்ளன. அந்த வகையில், பிரதமர் தினமும்  பிறந்தநாள் கொண்டாட வாழ்த்துகிறேன். நாட்டில் இன்னமும் 3ல் ஒரு பங்கு பேர் மட்டுமே ஒற்றை டோஸ் தடுப்பூசி  பெற்றுள்ளனர். 21 சதவீதம் பேர் மட்டுமே 2 டோஸ் தடுப்பூசியும் பெற்றுள்ளனர்’’ என்றார்.

Related Stories: