திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்துக்கு ஆன்லைனில் டிக்கெட்: ஒரு வாரத்துக்குள் வழங்க ஏற்பாடு

திருமலை:திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று கூறியதாவது: ஏழுமலையானின் தீவிர பக்தரான தாளப்பாக்கம் அன்னமய்யா வெங்கடேஸ்வர சுவாமி குறித்து எழுதிய 4 ஆயிரம் கீர்த்தனைகளை தேவஸ்தானம் அச்சடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த கீர்த்தனைகள் மூலமாக இளம்  தலைமுறையினரின் தனித்திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக, ‘அதிகோ அல் அதிகோ’ எனும் பெயரில் ஆந்திராவில் முதற்கட்டமாக 15 முதல் 25 வயதுடைய ஆண், பெண்கள் பங்கேற்கும் பாட்டு போட்டி, தேவஸ்தான தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும்.

இந்த போட்டி விரைவில் கன்னடம், இந்தியிலும், பின்னர் தமிழ், இந்தி ெமாழியிலும் நடத்தப்படும். ஏழுமலையான் தரிசனத்துக்கு விரைவில் இலவச தரிசன டிக்கெட்டுகள் ஒரு வாரத்துக்குள் ஆன்லைனில் வழங்கப்படும். தேவஸ்தான வெப்சைட் டை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால் சர்வர் முடங்குகிறது. எனவே ரிலையன்ஸ் ஜியோ மூலமாக சர்வரை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கோயிலில் மட்டுமே பிரமோற்சவ விழா

சுப்பா ரெட்டி மேலும் கூறுகையில், ‘‘கொரோனா 3வது அலை காரணமாக, அக்டோபர் 7ம் தேதி தொடங்க உள்ள வருடாந்திர பிரமோற்சவம் இந்த முறையும் பக்தர்களின்றி கோயிலுக்குள் நடத்தப்படும். சுவாமி வீதியுலாவும் ரத்து செய்யப்படும். கொரோனா நெறிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்,’ என்றார்.

நந்தகுமார் பதவியேற்பு

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார், ஏழுமலையான் கோயிலில் நேற்று அந்த பதவியை ஏற்றுக்கொண்டார். அவருக்கு இணை செயல் அதிகாரி பார்கவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், நந்தகுமார் கூறுகையில், ‘`சுவாமியின் முன் பதவியேற்றது ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.  இந்த வாய்ப்பளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். கொரோனா குறைந்த பிறகு  தமிழக பக்தர்களுக்கு என்னால் முடிந்த வசதிகளை செய்வேன்,’’ என்றார்.

Related Stories: