‘பேய்’ எனது கழுத்தை நெரித்தது! - பாஜக மூத்த நடிகை திகில் பேட்டி

மும்பை: பாஜக மூத்த நடிகை ஹேம மாலினி, திரைப்பட படப்பிடிப்பு காலங்களில் பேய் வசித்த வீட்டில் வசித்ததாக பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளார். பாலிவுட் மூத்த நடிகையும், பாஜக எம்பியுமான ஹேம மாலினி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘எனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில், சில நாட்கள் பேய் வசித்த வீட்டில் வசித்து வந்தேன். ‘ஸ்வப்னா சவுதாகர்’ (1968) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக பாந்த்ராவில் உள்ள மன்வேந்திரா அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினோம்.

அந்த பிளாட் மிகவும் சிறியதாக இருந்தது. அதன் பிறகு ஜூஹுவின் 7-வது சாலையில் உள்ள பங்களாவில் தங்கினோம். அந்த பங்களாவில் என் தாயுடன் தூங்கினேன். அப்போது, அங்கு தங்கிய ஒவ்வொரு நாள் இரவும் யாரோ  ஒருவர் என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன். இந்த விஷயங்கள்  கொஞ்சம் விசித்திரமாகத் தெரியலாம். ஆனால், அது உண்மை. ஒரு முறை அல்லது இரண்டு முறை நடந்திருந்தால் கூட அதைப் புறக்கணித்திருக்கலாம், ஆனால், மீண்டும் மீண்டும் யாரோ என்னுடைய கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தேன்.

அப்போதெல்லாம், ஒருவித அச்ச உணர்வுடனே இருந்தேன். அதன் பிறகு நாங்கள் அந்த வீட்டை காலி செய்துவிட்டு, சொந்தமாக தனி குடியிருப்பை விலைக்கு வாங்கினோம்’ என்றார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ‘பேய்’ சம்பவத்தை ஹேமா மாலினி தற்போது பகிர்ந்துள்ளதால், சமூக ஊடகங்களில் பேய் குறித்த அனுபங்களையும், அதுதொடர்பான மூடநம்பிக்கை குறித்தும் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories:

>