குஜராத் பாஜ அரசில் பதவியை பிடிக்க மோதல் அமைச்சர்கள் பதவியேற்பு விழா கடைசி நேரத்தில் ஒத்திவைப்பு: ரூபானி அரசில் இருந்த 90% பேர் நீக்குவதால் குழப்பம்

அகமதாபாத்: குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய அரசில் ஆரம்பத்திலேயே மோதல் வெடித்துள்ளது. முன்னாள் அமைச்சகர்கள் பெரும்பாலானோர் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட சண்டையில், அமைச்சரவை பதவியேற்பு விழா, கடைசி நிமிடத்தில் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் பாஜ தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்வர் விஜய் ரூபானி திடீரென பதவி விலகினார். இதைத் தொடர்ந்து முதல் முறை எம்எல்ஏவான பூபேந்திர படேல் (59) கடந்த 13ம் தேதி புதிய முதல்வராக பதவியேற்றார். பூபேந்திர படேல் தலைமையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக கடந்த 2 நாட்களாக புதிய அமைச்சர்களை தேர்வு செய்வதில் முதல்வர் பூபேந்திர படேல் மும்முரமாக ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று பதவியேற்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பதவியேற்பு விழா செப்டம்பர் 15ம் தேதி, பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் என பேனர்களும் வைக்கப்பட்டன. ஆனால், புதிய அமைச்சர்கள் யார், எத்தனை பேர் என்ற தகவல்கள் வெளியிடப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், கடைசி நிமிடத்தில் பதவியேற்பு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பதவியேற்பு விழா இன்றைக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான எந்த காரணமும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, புதிய ஆட்சியால் பாஜ கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பமே அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஒத்திவைக்க காரணம் என கூறப்படுகிறது.

* 90% அமைச்சர்கள் நீக்கம்

முன்னாள் முதல்வர் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர்களில் 90% பேர் புதிய அரசில் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் விஜய் ரூபானியை சந்தித்து ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர். இதுதவிர, துணை முதல்வர் நிதின் படேல்தான் அடுத்த முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் அவரும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இந்த இடியாப்ப சிக்கலால் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, முதல்வர் பூபேந்திர படேல் தயாரித்த பட்டியலை ஒதுக்கிவிட்டு, புதிய அமைச்சர்கள் பட்டியல் இன்றைக்குள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: