நீட் தேர்வு பலிகள் வணிக நாடகத்தை அரங்கேற்றும் ஒன்றிய அரசு: கமல்ஹாசன் கடும் கண்டனம்

சென்னை: சேலம் மேட்டூர் அருகிலுள்ள கூளையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவகுமார் மகன் தனுஷ் (19), நீட் தேர்வு பயம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தை சேர்ந்த கருணாநிதி, ஜெயலட்சுமி தம்பதியின் மகள் கனிமொழி (17), 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றிருந்தார். கடந்த 12ம் தேதி நீட் தேர்வு எழுதினார். ஆனால், தேர்வு கடினமாக இருந்ததால் சரியாக எழுதவில்லை என்று தந்தையிடம் சொல்லி வருத்தப்பட்ட அவர், தனது மருத்துவப் படிப்பு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்விரு சம்பவங்களும் தமிழக மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், அநீதியான நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தால்  உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12ம் தேதி தொலைபேசி மூலம் ஆறுதல் சொன்னார்.   ‘இது இறுதி மரணமாக இருக்கட்டும். எந்த தாய்க்கும் இதுபோன்ற சோகம் வரக்கூடாது. எல்லோரும் சேர்ந்து நீட் தேர்வுக்கு முடிவு கட்டுங்கள்’ என்று தனுஷின் தாய் கதறியழுதபோது, ‘ஈடுசெய்ய முடியாத இழப்பு இது. இழந்த பிள்ளைக்கான ஒப்பாரியில் நானும் பங்கெடுக்கிறேன்.

நீட் தேர்வுக்கு  எதிராக இன்னும் வலுவாகப் போராடி, அடுத்த தலைமுறை பிள்ளைகளை காப்போம்’ என்று கமல்ஹாசன் ஆறுதல் கூறினார். இதையடுத்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க, இங்கு தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்’ என்று, ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: