மாநிலங்களவை தேர்தல் திமுக வேட்பாளராக டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார் போட்டி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக டாக்டர் கனிமொழி, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில். 2020ம் ஆண்டு 6 மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக இருந்தன. இதில், திமுக, அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைத்தன. அதிமுக தரப்பில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அதிமுக கூட்டணியில் இருந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கும் மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டன. கடந்த மே மாதம் முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து, இவர்கள் தங்களின் எம்பி பதவியை கடந்த ஏப்ரல் 10ம் தேதி ராஜினாமா செய்தனர். அதே போல், 2019ம் ஆண்டு அதிமுக மாநிலங்களவை எம்பி.யாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான் இறந்தார். இதனால், தமிழகத்தில் மொத்தம் மூன்று மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக இருந்தன.

இந்நிலையில், காலியாக உள்ள இந்த பதவிகளுக்கு மற்ற மாநிலங்களில் நடத்தியது போல், தமிழகத்திலும் தனித்தனியாக நடத்தும்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, முகமது ஜானால் காலியான பதவிக்கு மட்டும் கடந்த மாதம் 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், திமுக வேட்பாளர் முகமது அப்துல்லா போட்டியின்றி கடந்த 4ம் தேதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். காலியாக உள்ள மற்ற 2 இடங்களுக்கான தேர்தல், அக்டோபர் 4ம் தேதி நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி அறிவித்தது. இதற்கான வேட்பு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. வருகிற 22ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 23ம் தேதி மனுபரிசீலனையும், 27ம் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். போட்டியிருப்பின் அக்டோபர் 4ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு: 2021 அக்டோபர் 4 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை இரண்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக டாக்டர். கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கனிமொழி, திமுகவின் ஆரம்ப கால தலைவரான வி.என்.நடராஜனின் மகன் என்.வி.என்.சோமுவின் மகள் ஆவார். என்.வி.என்.சோமு 1996ல் வடசென்னையில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒன்றிய பாதுகாப்புதுறை இணை அமைச்சராக இருந்தவர். ராணுவ முகாமிற்கு ஹெலிகாப்டரில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கனிமொழி, 2014ம் ஆண்டு வடசென்னை தொகுதியிலும், 2016ல் தி.நகர் சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். இவர் தற்போது திமுக மருத்துவர் அணி மாநில செயலாளராக உள்ளார். தற்போது திமுகவுக்கு இருக்கும் எம்எல்ஏக்களின் பலத்தால் திமுக வேட்பாளர்கள் 2 பேரும் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயரும். ஏற்கனவே திமுகவில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வில்சன், என்.சண்முகம், என்.ஆர்.இளங்கோவன், முகமது அப்துல்லா ஆகிய 8 பேர் மாநிலங்களவை உறுப்பினாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

திமுக மாநிலங்களவை வேட்பாளர் ராஜேஷ்குமார் பயோடேட்டா:

பிறந்த தேதி: 27.03.1977 எம். காம்., பட்டப்படிப்பும், கூட்டுறவு மேலாண்மை துறையில் பட்டய படிப்பும் பெற்றவர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் மூத்த திமுக  முன்னோடி கே.ஆர்.இராமசாமி அவர்களின் பேரன். பெரியார், அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியரிடம் நெருங்கி பழகியவர் கே.ஆர்.இராமசாமி. 1967-யில் இவருடைய தாத்தா கே.ஆர்.இராமசாமி. திருச்செங்கோடு நாடாளுமன்ற தேர்தலுக்கு பேரறிஞர் அண்ணா, திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், பேரறிஞர் அண்ணா  கேட்டுகொண்டதற்கு இணங்க, பேராசிரியர் க.அன்பழகன் விட்டு கொடுத்ததனால் அவருடன் நெருங்கிய நட்பு பாராட்டு பெற்றார்.

ராஜேஷ் குமார் 1994 ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராகவும் 1998-யில் கழக பொன்விழா ஆண்டில் கிளைக்கழக செயலாளராகவும், ஒன்றிய பிரதிநிதியாகவும், வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளராகவும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி 2011முதல் 2020 வரை நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராகவும் பணியாற்றினார். 2020ம் ஆண்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கபட்டார். மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு தனது கடுமையான உழைப்பால் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம் (தனி) ஆகியவை அதிமுக வசம் இருந்ததை திமுக வசமாக்கினார்.

கொங்கு மண்டலத்தில் 100 சதவிகித வெற்றி பெற்ற மாவட்ட செயலாளர் என்ற பெருமைக்குரியவர். தனக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கபடவில்லை என்றாலும் மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற பாடுபட்டவர் என தமிழக முதலமைச்சர் அவர்களால் பாராட்டு பெற்றவர். திமுக தலைமை கழகத்தின் இளைஞர் அணி சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் நடத்தப்படும் மாநில அளவிலான கவிதை- கட்டுரை போட்டியை 2016 ஆம் ஆண்டு நாமக்கல்லில் மிகச் சிறப்பாக நடத்தி தலைவர் அவர்களின் பாராட்டை பெற்றார்.2019 ஆம் ஆண்டு திமுக சார்பில் நடத்தபட்ட  கிராம சபை கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் கிராம சபை கூட்டத்தில் பங்கு பெற்று சிறப்பாக நடத்தியவர் என்ற பாராட்டை பெற்றார்.தலைமை கழகத்தின் சார்பாக 11-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கும் ஆணையாளராக சென்று சிறப்பாக பணியாற்றியவர் என்ற பாராட்டை பெற்றார்.அதேபோன்று கழகம் அறிவித்த அனைத்து ஆர்பாட்டம் போராட்டங்களிலும் சிறு வயது முதலே பங்கு கொண்டு சிறை சென்றார்.இராசிபுரம் பகுதியில் திராவிட முன்னேற்ற கழகத்தை வளர்த்ததில் மிகப்பெரிய பங்கு இவருடைய தாத்தாவிற்கு உண்டு.

Related Stories: