தடுப்பூசி செலுத்த 100 சதவீதம் இலக்கை எட்ட வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் கிராமத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்த இரு சக்கர வாகன  பேரணியில் மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோர் பங்கேற்றனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையொட்டி, இந்த ஊராட்சியை சேர்ந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமாருக்கு பாராட்டு தெரிவித்தும், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி  செலுத்தியதற்காகவும், இந்த ஊராட்சியில் இருந்து இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரிட்டிவாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் தில்லை குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட எஸ்பி.வருண்குமார் ஆகியோர் கொடியசைத்து இருசக்கர வாகன பேரணியை தொடக்கி வைத்து, பின்னர் அவர்களே இருசக்கர வாகனங்களை ஓட்டிச்சென்றனர். முன்னதாக ஊராட்சி செயலாளர் தனசேகர் வரவேற்றார். பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் இருந்து தொடங்கிய இப்பேரணி போந்தவாக்கம், கச்சூர், சீத்தஞ்சேரி, பூண்டி வழியாக சென்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தை சென்றடைந்தது.

அப்போது கலெக்டர் பேசியதாவது: வருகின்ற 12 ம் தேதி மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை வலியுறுத்தி, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது என்றார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட 37 ஊராட்சிகளின் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் ஆகியோரை, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் எஸ்பி .வருண்குமார், திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் ஆகியோர் பாராட்டி, கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரிய தர்ஷிணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜவஹர்லால், பூண்டி ஒன்றிய குழு தலைவர் பி.வெங்கடரமணா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் மகாலட்சுமி மோதிலால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: