யுஎஸ் ஓபன் டென்னிஸ் 19 வயது லீலாவிடம் ஒசாகா தோல்வி

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், கனடாவை சேர்ந்த 19 வயது இளம் வீராங்கனை லீலா பெர்னாண்டசிடம் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். தரவரிசையில் 73வது இடத்தில் உள்ள லீலாவுடன் மோதிய ஒசாகா (3வது ரேங்க்) முதல் செட்டை 7-5 என கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் அவர் வெற்றியை நெருங்கிய நிலையில், கடுமையாகப் போராடிய லீலா 7-6 (7-2) என டை பிரேக்கரில் வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதில் அபாரமாக விளையாடிய லீலா 5-7, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 3வது சுற்றில் ஸ்பெயினின் முகுருசா 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் அசரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் கெர்பர் (ஜெர்மனி), ஹாலெப் (ருமேனியா), சபலென்கா (பெலாரஸ்), கிரெஜ்சிகோவா (செக்.), ஸ்விடோலினா (உக்ரைன்), மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் கிரீஸ் நட்சத்திரம் சிட்சிபாஸ் 3-6, 6-4, 6-7 (2-7), 6-0, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் 18 வயது வீரர் கார்லோஸ் அல்கராஸிடம் (ஸ்பெயின்) 4 மணி, 7 நிமிடம் போராடித் தோற்றார். டானில் மெட்வதேவ் (ரஷ்யா), டியபோ (யுஎஸ்), டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றிலேயே இந்தியாவின் சானியா மிர்சா - ராஜீவ் ராம் (அமெரிக்கா) ஜோடி தோற்று வெளியேறியது.

Related Stories: