யார் வேண்டுமானாலும் சேனலை தொடங்கலாம் யூடியூப்.பில் போலி செய்திகள் சுதந்திரமாக பரப்பப்படுகின்றன: உச்ச நீதிமன்றம் கவலை

புதுடெல்லி: ‘யூடியூப்.பில் போலி செய்திகள் சுதந்திரமாக பரப்பப்படுகின்றன,’ என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்தாண்டு நடந்த மதக் கூட்டம் தொடர்பாக போலி செய்திகளை பரப்புவதைத்  தடுக்கும்படியும், பொய் செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜாமியத் உலமா-இ-ஹிந்த் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது, தலைமை நீதிபதி என்வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: சமூக ஊடக தளங்கள், இணையதளங்களில் போலி செய்திகள் அதிகம் உலா வருகின்றன. தனியார் செய்தி சேனல் செய்திகள் வகுப்புவாத தொனியை கொண்டுள்ளன. இது, நாட்டிற்கு கெட்ட பெயரைக் கொண்டு வரும். நீங்கள் (ஒன்றிய அரசு) எப்போதாவது இந்த தனியார் சேனல்களை ஒழுங்குப்படுத்த முயற்சித்தீர்களா? சமூக ஊடகங்கள் சக்தி வாய்ந்த குரல்களை மட்டுமே கேட்கின்றன. நீதிபதிகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக எந்தவித பொறுப்பும் இல்லாமல் பொய் செய்திகள் வெளியிடப்படுகின்றன. இணையதளங்கள், யூடியூப் சேனல்களில் போலி செய்திகள், அவதூறுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை. நீங்கள் யூடியூபிற்குச் சென்றால், போலி செய்திகள் எவ்வாறு சுதந்திரமாகப் பரப்பப்படுகின்றன என்பதை அறியலாம். யார் வேண்டுமானாலும் யூடியூப்பில் ஒரு சேனலை தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Related Stories: