நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கட்டிடங்களை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு: 915 வீடுகள், 21 கடைகளை கொண்டது

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா மாவட்டத்தில் சூப்பர்டெக் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் 915 குடியிருப்புகள், 21 கடைகள் உள்ள இரண்டு பெரிய 40 மாடிகள் கொண்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த கட்டிடங்களை இடிக்கும்படி கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சூப்பர்டெக் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சில தினங்களுக்கு முன் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியது. அதில், ‘இந்த பிரச்னையில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது. அதனால், நொய்டாவில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட 40 மாடிகளை கொண்ட இரண்டு கட்டிடங்களும் அடுத்த மூன்று மாதத்துக்குள் முழுவதுமாக இடிக்கப்பட வேண்டும். அதற்கான செலவுகளை சூப்பர்டெக் நிறுவனமே ஏற்க வேண்டும். மேலும், குடியிருப்புகளை வாங்கியவர்களுக்கான தொகையை 12 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும்,’ என கூறப்பட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, மேல்முறையீடு செய்யப்படும் என சூப்பர்டெக் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மொகித் அரோரா தெரிவித்துள்ளார்.

Related Stories: