பூண்டிமாதா பேராலயத்தில் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா கொடியேற்றம்-பக்தர்கள் இன்றி நடந்தது

திருக்காட்டுப்பள்ளி : திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலயத்தில் “அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா” கொடியேற்றம் நேற்று (30ம் தேதி) மாலை பக்தர்கள் இன்றி நடைபெற்றது.திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயம் இந்தியாவில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் மாதம் 30ம்தேதி முதல் செப்டம்பர் மாதம் 9ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு விழா கொடியேற்றம் நேற்று (30.8.21) மாலை நடந்தது. முன்னதாக மாதாவின் படம் வரையப்பட்ட வண்ணக் கொடியுடன் பங்கு தந்தையர்கள் ஊர்வலமாக வந்து பேராலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தை அடைந்தனர். பேராலய அதிபர் பாக்கியசாமி கொடியை புனிதப்படுத்தி கொடிமரத்தில் ஏற்றினார்.

இதில் பூண்டிமாதா பேராலய துணை அதிபர் ரூபன், பூண்டி மாதா தியான மைய இயக்குநர் சாம்சன், உதவித்தந்தைகள் இனிகோ, ஜான்சன், ஆன்மீகத் தந்தை அருளானந்தம் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீசார் செய்தனர்.இன்று (31ம் தேதி) முதல் 7ம் தேதி வரை நவநாட்கள் திருப்பலி பூசைகள் நடைபெறும்.

செப். 8ம் தேதி மாலை மற்றும் 9ம் தேதி காலை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெறும். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் இருந்தபடியே மாதாவை தரிசிக்க யூ டியூப் மற்றும் புதுச்சேரி லூர்து டிவி மூலம் திருவிழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது என்று பேராலய அதிபர் பாக்கியசாமி கூறினார்.

Related Stories: