விழுப்புரம் அருகே குழந்தையை தாக்கி கைதான தாய் துளசியை 15 நாள் சிறை: செஞ்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை தாக்கி கைதான தாய் துளசியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 15 நாள் நீதிமன்ற காவலில் துளசியை சிறையிலடைக்க செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் உத்தரவிட்டுள்ளார். குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் துளசி நேற்று கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மணலப்பாடி மதுரா மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (37).

மனைவி துளசி (22). இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக துளசி, தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதீப்பை, துளசி சரமாரியாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை கண்ட வடிவழகன், சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆந்திரா சென்று, துளசியை கைது செய்து செஞ்சிக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்: வடிவழகனும், துளசியும் சென்னையில் குடியிருந்தபோது பிரேம்குமார் என்பவருடன் துளசிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி போனில் பேசினர். பின்னர் சொந்த ஊருக்கு வந்த பிறகும் வீடியோகால் மூலம் துளசியும், பிரேம்குமாரும் பேசினர். ஒரு கட்டத்தில், ‘உன் 2 குழந்தைகளையும் அடித்து துன்புறுத்து, அதைப்பார்த்து உன் கணவன் உன்னை விட்டு பிரிந்து விடுவான். நாம் சந்தோஷமாக இருக்கலாம்’ என்று துளசியிடம் பிரேம்குமார் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து துளசி தனது 2 மகனை அடித்து துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார்.

இது கணவருக்கு தெரியாது. பின்னர் குடும்ப பிரச்னையால் ஆந்திராவில் உள்ள தாய்வீட்டுக்கு துளசி சென்று விட்டார். இதனிடையே அவரது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததும் வடிவழகன் ஆத்திரமடைந்தார். ஆந்திராவுக்கு சென்று மனைவியிடம் சண்டையிட்டார். பின்னர் உறவினர்களிடம் பேசி மனைவியை பிரிந்து விடுவதாக கூறி, தாலி மற்றும் அவரது செல்போன் ஆகியவற்றை வாங்கி செஞ்சிக்கு வந்துவிட்டார். அது ஆன்ட்ராய்டு போன் என்பதால் வடிவழகனுக்கு உபயோகப்படுத்த தெரியவில்லை. உறவினர்களிடம் கொடுத்து பார்த்தபோது துளசி, மகனை அடித்து துன்புறுத்திய வீடியோ இருந்துள்ளது.

அதை பார்த்து வடிவழகன் ஆத்திரமடைந்தார். இதற்கிடையே உறவினர் ஒருவர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளார். வடிவழகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துளசியிடம் வாக்குமூலம் பெற்றனர். இவ்வாறு தெரியவந்துள்ளது. குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் துளசி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குழந்தையை தாக்கிய கைதான தாய் துளசியை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: