தலைமுடி ஆய்வு செய்ததில் அம்பலம் நடிகைகள் ராகிணி திரிவேதி சஞ்சனாவுக்கு போதை பழக்கம் : தடயவியல் அறிக்கை

பெங்களூரு: போதை பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பிரபல  நடிகைகளின் தலை முடி மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டாக போதை மாத்திரைகளை பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. கன்னட  திரையுலகில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகளில் அதிகளவு போதை பொருள்  புழக்கம் இருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய  குற்றப்பிரிவு  போலீசாருக்கு தகவல் வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய  அதிகாரிகள் முறையான ஆதாரங்களை வைத்து போதை பொருள் மாபியா கும்பலை சேர்ந்த  சில  சப்ளேயர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள்  கொடுத்த தகவலை வைத்து, கன்னட நடிகை ராகிணி திரிவேதி, சஞ்சனா கல்ராணி,  தொழில் அதிபர்கள், உள்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

பல  நாட்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த அவர்களிடம் ரத்த மாதிரிகள், நகம்  மற்றும் சிறுநீர் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்  போதை பொருள் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இறுதியாக  நடிகைகளின் தலை முடியை சேகரித்து, அவற்றை தடயவியல் ஆய்விற்கு  ஐதராபாத்திற்கு அனுப்பி வைத்தனர். 8 மாதங்கள் ஆகியும் அறிக்கை கிடைக்காமல்  இருந்தது. இந்நிலையில் நேற்று நடிகைகளின் தலைமுடி குறித்து தடயவியல் ஆய்வு  அறிக்கை போலீசாருக்கு கிடைத்தது. அதில் கன்னட நடிகைகள் ராகிணி, சஞ்சனா  ஆகியோர் போதை பொருட்கள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

ஒன்றரை ஆண்டுகள் அவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தது, ஆய்வில்  தெரியவந்துள்ளது. இதை வைத்து அவர்கள் போதை பொருள் மாபியா கும்பல்களுடன்  தொடர்பில் இருந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது.  அதே நேரம் விருந்து நிகழ்ச்சிகளுக்கு, போதை பொருள் சப்ளை செய்திருப்பது  உறுதியாகியுள்ளது. இதனால் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான  வழக்கை மீண்டும் தூசி தட்ட தொடங்கியுள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி உள்ளனர்.

Related Stories: