வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு கேரளாவில் 31ம் தேதி தென்மேற்கு பருவமழை

புதுடெல்லி: ‘தென்மேற்கு பருவமழை கேரள பகுதியில் மே 31ம் தேதி தொடங்கும்’ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆண்டு முழுவதும் தேவையான மழையில் 70 சதவீதத்தை ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை தருகிறது. விவசாயத்திற்கு மிகவும் அவசியமான தென் மேற்கு பருவ மழை இந்த ஆண்டு முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. தெற்கு அந்தமான கடல், வங்காளவிரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபர் தீவுகளில் வரும் 19ம் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளது.

இதைத் தொடர்ந்து கேரளாவில் வரும் 31ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொகபத்ரா நேற்று கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும். இந்தமுறை ஒருநாள் முன்பாக தொடங்க வாய்ப்புள்ளது’’ என்றார். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழைக் காலத்தில் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு கேரளாவில் 31ம் தேதி தென்மேற்கு பருவமழை appeared first on Dinakaran.

Related Stories: