நிலக்கரி மாயமான விவகாரத்தில் யாரை காப்பாற்ற முயற்சி கடந்த ஆட்சியில் தவறு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தங்கமணிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

கரூர்: வடசென்னை அனல்மின் நிலையத்தில் தவறு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காதது யாரை காப்பாற்றுவதற்காக என்று முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மின்சார அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரில் நேற்று அளித்த பேட்டி: வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறைந்திருப்பதாக வாரியத்துக்கு தகவல் வரப்பெற்றது. இதுதொடர்பாக மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் கடந்த 6 மற்றும் 9ம்தேதி ஆய்வு செய்ததில் 2 லட்சத்து 38ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

நான் வெளியிட்ட அறிக்கையில், குழு அமைக்கப்பட்டதற்கான நகலும், அந்த குழுவின் அறிக்கையின் நகலும் வெளியிடப்பட்டன. அதிமுக ஆட்சியில் இத்துறையை நிர்வகித்த தங்கமணி, ஏதோ அவர்கள் அமைத்த குழுவின் அறிக்கைதான் என சொல்கிறார். நான் கூறி இரண்டு நாள் ஆகி விட்டது. இதுவரை அவர்கள் குழு அமைத்திருந்தால் அந்த குழுவின் நகலை வெளியிட்டிருக்க வேண்டும். எந்த தேதியில் குழு அமைத்தார்கள். அதற்குண்டான நகல் மற்றும் குழுவின் அறிக்கையையும் வெளியிட்டிருக்க வேண்டும்.

அவர்கள் ஆட்சியில் இருந்தபோது தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படியென்றால் கடந்த ஆட்சியில் தவறுகள் தெரிந்து, யாரை காப்பாற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டது?. கடந்த ஆட்சியில் அவர்கள் செய்த தவறு இப்போது கண்டறியப்பட்டுள்ளது. அது எந்த துறைகளாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை இருக்கும். கொடநாடு பிரச்னையை பொறுத்தவரை ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் அடிப்படையில் தொடர் விசாரணையில் உள்ளது. அந்த விசாரணையின் தொடர்ச்சிதான் இப்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதல்வரை பொறுத்தவரை தெளிவாக எடுத்துச்சொல்லியிருக்கிறார்.

தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைத்தான் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். இவர்கள் தானே வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள், நிறைவேற்றுங்கள் என கூறுகின்றனர். தவறு செய்யாதவர்கள் விசாரணைக்கு தயாராக வேண்டியதுதானே? ஏன் பயப்பட வேண்டும். மடியில் கனம் இருக்கு. அதனால் அவர்கள் வழியில் பயம் இருக்கு. சட்டத்திற்கு உட்பட்டு யார் அங்கு தவறு செய்திருந்தாலும் அரசு அவர்களை தண்டனைக்கு உள்ளாக்கும். சட்டப்படி தான் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட குழு தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய அனல் மின் நிலையங்களில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வறிக்கை வரப்பெற்றதும் அதுவும் தெரியப்படுத்தப்படும். அந்த ஆய்வின் அடிப்படையிலும் நடவடிக்கை நிச்சயம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: