12 முதல் 18 வயதுள்ளவர்களுக்கான ஜைகோவ்-டி தடுப்பு மருந்து செப். இறுதியில் கிடைக்கும்: ஜைடஸ் கேடில்லா நிறுவனம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘ஜைகோவ்-டி தடுப்பூசி அடுத்த மாதம் இறுதி முதல் கிடைக்கும்,’ என்று ஜைடஸ் கேடில்லா நிறுவனம் அறிவித்துள்ளது.  நாட்டின் 6வது தடுப்பூசியாக ‘ஜைடஸ் கேடில்லா’ என்ற இந்திய நிறுவனம் தயாரித்துள்ள, முதல் மரபணு (டிஎன்ஏ) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான ‘ைஜகோவ் - டி’க்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது. இது, இது 12 முதல் 18 வயதுடைய பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள முதல் தடுப்பு மருந்தாகும். மேலும், ஊசி மூலம் செலுத்தப்படாத உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷர்வில் படேல் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜைகோவ்-டி.யின் விலை நிர்ணயம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும். செப்டம்பர் நடுப்பகுதி முதல் இருந்து  இறுதிக்குள் இதன் விநியோகம் தொடங்கும். முதல் கட்டமாக, ஒரு கோடி டோஸ் மருந்தை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த இலக்கை அக்டோபரில் அடைவோம் என்று நம்புகிறோம். அடுத்தாண்டு ஜனவரி முடிவில் 4 முதல் 5 கோடி டோஸ் வரை கொடுப்போம்,’’ என்றார்.

பாதிப்பு தொடர்ந்து சரிவு

ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்ட கடந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பலி, பாதிப்பு குறித்த அறிக்கை வருமாறு:

* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,457 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 286 ஆக உயர்ந்துள்ளது.

* நேற்று ஒரே நாளில் 375 பேர் உயிரிழந்தனர்.  இதனால், மொத்த பலி எண்ணிக்கை 4,33,964 ஆக அதிகரித்தது.

* 36,347 பேர் தொற்றில் இருந்து மீண்டதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,15,97,982 ஆக உயர்ந்துள்ளது.

* நாடு முழுவதும் 3,61,340 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது, கடந்த 151 நாட்களில் இல்லாத வகையில் மிக குறைவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: