மேற்கு வங்க தேர்தல் வன்முறை கொலை, பலாத்கார வழக்கு விவரங்களை ஒப்படைக்கும்படி டிஜிபி.க்கு சிபிஐ கடிதம்

 *உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாளே சுறுசுறுப்பு

*இணை இயக்குனர்கள் தலைமையில் 4 தனிப்படை

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு நடந்த கொலைகள், பாலியல் பலாத்கார வழக்குகளின் விவரங்களை ஒப்படைக்கும்படி இம்மாநில டிஜிபிக்கு சிபிஐ கடிதம்  அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக இணை இயக்குனர்கள்  தலைமையில் 4 தனிப்படைகளையும் அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள், கடந்த மே 2ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், மம்தா பானர்ஜி  தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து, தேர்தலில் பாஜ.வுக்கு ஆதரவாக பணியாற்றிய அக்கட்சி நிர்வாகிகள், குடும்பத்தினர் மீது திரிணாமுல் காங்கிரசார் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா  உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நேற்று  முன்தினம் தீர்ப்பு அளித்தது. அதில், வன்முறையில் நடந்த கொலை, கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐ.யும். இதர சம்பவங்கள் பற்றிய வழக்குகளை சிறப்பு  புலனாய்வு குழுவும் விசாரிக்கும்படி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த விசாரணைகளை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் கீழ் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிபிஐ அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தேர்தலுக்குப் பிறகான வன்முறையில் நடந்த கொலைகள், கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் தொடர்பாக  மாநிலம்  முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி, மேற்க வங்க டிஜிபி.க்கு சிபிஐ நேற்று கடிதம் எழுதியது. மேலும், இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக 4 தனிப்படைகளையும் அமைத்துள்ளது. இந்த படைகள் ஒவ்வொன்றுக்கும் இணை இயக்குனர்களான ரம்னிஷ், அனுராக், வினித் வினாயக், சம்பந்த் மீனா ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர்.

இந்த ஒவ்வொரு தனிப்படையிலும் ஒரு டிஐஜி, 4 எஸ்பி.க்கள் உள்ளிட்டோர் இடம் பெற உள்ளனர். இந்த நான்கு படைகளின் விசாரணைகளையும் கூடுதல் சிபிஐ இயக்குனர் அஜய் பட்நாகர் மேற்பார்வையிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.   கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த மறுநாளே, சிபிஐ இந்த விசாரணையில் இவ்வளவு வேகமாக இறங்கி இருப்பது மம்தாவுக்கு பெரியளவில் சிக்கலை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

கேவியட் மனு தாக்கல்

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் வன்முறை தொடர்பாக கொல்கத்தா  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான வழக்கறிஞர் அனிந்தியா சுந்தர் தாஸ், உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘கொல்கத்தா  உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேற்கு வங்க அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தால், எனது  தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: