போதுமான ஆதாரம் இல்லை சுனந்தா புஷ்கர் வழக்கில் எம்பி சசிதரூர் விடுவிப்பு: டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்பி சசிதரூரை விடுவித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லி சாணக்யபுரியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 2014ம் ஆண்டு, ஜனவரி 17ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை சசிதரூர் தான் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் 498ஏ, 306 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஏப்ரல் 12ம் தேதி ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி கோயல் நேற்று தீர்ப்பை வழங்கினார். அதில், சசிதரூர் மீதான குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்பதால் அவரை நீதிமன்றம் விடுதலை செய்கிறது என உத்தரவிட்டார். அப்போது, வழக்கு தொடர்பாக காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி இருந்த சசிதரூர், தீர்ப்பை கேட்டதும் நீதிபதிக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் கடந்த ஏழரை ஆண்டுகளாக மிகவும் வேதனையை அனுபவித்து வந்ததாகவும் நீதிபதி முன்னிலையில் அவர் குறிப்பிட்டார்.

Related Stories: