ஒடிசாவில் முதன்முறையாக நக்சல் கோட்டையில் பறந்த தேசியக்கொடி

மல்கன்கிரி: ஒடிசாவில் நக்சல்களின் ஆதிக்கம் உள்ள பகுதியில் நேற்று எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தேசியக்கொடியை ஏற்றினர். ஒடிசா - சட்டீஸ்கர் மாநில எல்லையில் உள்ளது மல்கன்கிரி மாவட்டம். இங்கிருந்து 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள மொகுபடர் பகுதியில் நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களின் தொடர் வன்முறையால் இங்கு மாநில அரசால் எந்த நல்ல திட்டங்களையும் கொண்டு வர முடிவதில்லை. இங்குள்ள பள்ளிகள், பஞ்சாயத்து கட்டடங்கள் போன்றவற்றை அவர்கள் சூறையாடியுள்ளனர். அவர்களின் வெறியாட்டத்துக்கு காவல் நிலையமும் தப்பியதில்லை. பாதுகாப்பு படையினரும் இங்கு நக்சல்களின் பல தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.   

இத்தனை பதற்றம் நிறைந்த கிராமமான மொகுபடரில் நேற்று தேசியக்கொடி முதன்முறையாக ஏற்றப்பட்டது. இது குறித்து எல்லை பாதுகாப்பு படையின் ஐஜி எஸ்.கே.சிங் கூறுகையில், ‘‘மொகுபடரின் சூழலை மாற்ற விரும்பி பலகட்ட ஆலோசனைகளை சமீப நாட்களாக திட்டமிட்டு வந்தோம். இதற்கான முன்னெடுப்பை ‘பட்டாலியன் 160 பிரிவினர்’  தீவிரமாக மேற்கொண்டனர். அதன் விளைவாக முதன்முறையாக இங்கு தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வில் போலீஸ் அதிகாரிகள், உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர். மாநிலத்தில் மற்ற இடங்களைப் போல் இங்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அரசின் வளர்ச்சிப் பணிகளும் இங்கு வந்து சேர்வதற்கான சூழலை ஏற்படுத்துவதே எங்களின் அடுத்தகட்ட இலக்கு,’’ என்றார்.

Related Stories: