தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றிய அரசின் அமைப்பான சங்கீத நாடக அகாடமியின் நோக்கங்களை மாநில அளவில் செயல்படுத்துவதற்காகவும், தொன்மை வாய்ந்த தமிழகக் கலைகளைப் போற்றி, பேணிப் பாதுகாத்து வளர்க்கவும், தமிழ்நாடு அரசு வழங்கும் நல்கையினைக் கொண்டு கலைஞர்கள் பயனடையும் வகையில் பல்வேறு கலைப் பணித் திட்டங்களை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் செயல்படுத்தி வருகிறது.  

அதேபோன்று, நாட்டுப்புறக் கலைகளின் பல்வேறு பரிமாணங்களை உணரும் வகையிலும், அக்கலைகளை அழியாமல் பாதுகாப்பதற்கும், அவற்றில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியம் 2007ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞரால் தோற்றுவிக்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவிக் காலம் முடிவடைவதையடுத்து, அதன் புதிய தலைவராக வாகை சந்திரசேகரை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதோடு, தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் வகிப்பார் என அறிவித்துள்ளார்.

வாகை சந்திரசேகர் தமிழ்த் திரைப்படத் துறையில் தனது குணச்சித்திர நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்த காரணத்தால், இவரது நடிப்பாற்றலைப் பாராட்டி, 1991ம் ஆண்டு கலைஞர் இவருக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கிச் சிறப்பித்தார். அதோடுமட்டுமல்லாமல், 2003ம் ஆண்டு ஒன்றிய அரசால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் வாகை சந்திரசேகர். இவர் 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர்-செயலராகப் பதவி வகித்து, சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். அதோடு, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2016 முதல் 2021 வரை அந்தத் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற மக்கள் நலப்பணிகளை ஆற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: